Suganthini Ratnam / 2016 ஜூன் 03 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்.எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள செமட்ட செவண மாதிரிக் கிராம வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் 25 வீடுகளைக் கொண்டதாக இந்த வீட்டுத்திட்டம் அமைக்கப்படவுள்ளது. இந்த வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இவ்வீட்டுத்திட்டமானது பயனாளிகளின் ஐம்பது வீத பங்களிப்புடனும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஐம்பது வீத நிதியளிப்பிலும் அமையப்பெறவுள்ளதுடன், ஒவ்வொரு பயனாளிக்கும் பத்து பேர்ச் காணியில் வீடு அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.
இம்மாதிரிக் கிராமத்துக்கு மின்சாரம், வீதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவிக்கையில், 'நடுத்தர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு வீடு தேவையாக இருப்பவர்களை ஆராய்ந்து வீட்டுத்திட்டம் வழங்கப்படுகின்றது. இன்னும் பல வீடுகளை மாவட்டத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்' என்றார்.
'மேலும், இப்பிரதேசத்திலுள்ள காணிகளை சில அரச அதிகாரிகள் சுவீகரிப்பதற்கு நாங்கள் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம். இப்பிரதேசத்தில் தேவைக்கு அதிகமான காணி உள்ளதை நாங்கள் பெற்றுக்கொள்வோம் என நினைக்கின்றார்கள். இங்குள்ள மக்களுக்கு காணிகள் தேவையாக உள்ளன.
சில அரச அதிகாரிகள் காணிகள் மற்றும் வீடுகளை கொடுத்து பணம் வாங்கியுள்ளார்கள். இவ்வாறான நடவடிக்கைகள் மென்மேலும் நடைபெற்றால் அவர்களின்; பதவிகள் பறிமுதல் செய்யப்படும்.
கடந்த ஆட்சியில் எங்களால் ஏதும் செய்ய முடியாது இருந்தது. ஆனால், தற்போது இந்த அரசாங்கத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இந்த மண்ணில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பலர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்று நிம்மதியாக வாழ வைக்க வேண்டும்.
அபிலாஷைகளை வழங்க வேண்டும் என்பதற்காக நீங்கள் வழங்கிய வாக்கை புனிதமாக, நியாயாமாக, நீதியாக, தர்மமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாங்களும் கவனமாக இருக்கின்றோம்.
வாழைச்சேனை பாசிக்குடாவை அண்டிய பகுதியில் 250 வீட்டுத் திட்டங்களை அமைத்து மீனவர் குடும்பங்களுக்கு வழங்குவது தொடர்பாக சுற்றாடல் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் கதைத்தபோது உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் வீடமைப்பு அமைச்சருடன் கதைத்து நடவடிக்கை எடுத்து தருவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
அண்மையில் மைலம்பாவெளி காமாட்சி கிராம வீட்டுத்திட்ட திறப்பு விழாவிற்கு வருகை தந்த வீடமைப்பு அமைச்சருடன் இது தொடர்பாக ஞாபகப்படுத்தியபோது வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளரிடம் இது விடயமாக என்னோடு கதைத்து நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்' என்றார்.

19 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago