2025 மே 19, திங்கட்கிழமை

கல்விசாரா ஊழியர்கள் 25ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜனவரி 23 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் 25ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பிலான அறிவித்தல், ஒன்றிணைந்த கல்விசாரா சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் இவ்வறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு, சுற்று நிருபங்களின் படியான ஊழியர்களுக்கான நன்மைகள் அகற்றப்பட்டமை, ஆணைக்குழுவின் பிரதான பதவிகளான பிரதான கணக்காளர், பிரதான உள்ளக கணக்காய்வாளர், பிரதிச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படாமை, ஆட்சேர்ப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் செயலாளர் சிறிதரன் தங்கவேல்,

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் 2016.07.27 முதல் முன்னெடுக்கப்பட்;ட வேலைநிறுத்தம் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆகியோர் கையெழுத்திட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் 2020ஆம் ஆண்டுவரையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்து 100 வீதமாக்குதல் என்பது குறித்து 2018ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்படவில்லை.

குறித்த உடன்படிக்கையின் படி மொழித்தேர்ச்சிக் கொடுப்பனவு, காப்புறுதி சேவைகள், சொத்துக்களுக்கான கடன் எல்லையை அகற்றுதல், உரிய ஓய்வூதிய முறையை உருவாக்குதல், பதவி உயர்வுகளுக்கான வரையறைகளை நீக்குதல், சம்பள உயர்வுகளில் காணப்படும் வேறுபாடுகளை நீக்குதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் என்பவற்றிற்குத் தீர்வுகள் வழங்கப்படவேண்டும். ஆனால் இதுவரையில் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவை தொடர்பில் நேற்றைய தினம் (22) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவுகள் கிடைக்காத நிலையில்  எதிர்வரும் 25ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுதல் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X