Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கே.எல்.ரி.யுதாஜித் / 2017 ஜூலை 25 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாய மற்றும் மீனவ அமைப்புகள், கிராம அபிவிருத்தி அமைப்புகள், உள்ராட்சிமன்றங்களுக்கு மாத்திரம், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், மணல் அகழ்வுக்கான புதிய அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் மணலுக்கான விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்றபோது, இந்தப் பிரச்சினை கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில், "இம்மாவட்டத்தில் பொதுமக்களின் தேவைகளுக்கு மணல் மற்றும் கிரவலைப் பெறுவதில் சிரமம் காணப்படுகின்றது. இங்கு மணலுக்கான விலை அதிகரிப்பு பாரிய பிரச்சினையாக உள்ளது. மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதிலும் பிரச்சினை உள்ளது.
"எனவே, இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும்" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், ஒரு லோட் கிரவல் 6,500 ரூபாய்க்கும் ஒரு லோட் ஆற்று மணல் 12,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், தற்போது, மணல் விலை மாத்திரம் 26,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய்வரை அதிகரித்துள்ளது என, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மணல் மற்றும் கிரவல் விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை விவசாய மற்றும் மீனவ அமைப்புகள், கிராம அபிவிருத்தி அமைப்புகளுக்கு வழங்குவதன் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கூட்டத்தில் இதற்கு ஆமோதிக்கப்பட்ட நிலையில், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகளிடம், இதற்கான நடவடிக்கை தொடர்பில் மற்றும் விலைக்கட்டுப்பாடு தொடர்பில் வினவப்பட்டது.
இந்தப் பிரச்சினை தொடர்பில் இக்கூட்டத்தில் கலாந்தாலோசிக்கப்பட்டு, பழைய விலையை நடைமுறைப்படுத்தும் வகையில் விவசாய மற்றும் மீனவ அமைப்புகள், கிராம அபிவிருத்தி அமைப்புகள், உள்ராட்சிமன்றங்களுக்கு புதிய அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வது தொடர்பில் புவிச்சரிதவியல் திணைக்களத் தலைமையகத்துடன் கலந்துரையாடி, அதன் தீர்மானத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியும் என, புவிச்சரிதவியல் பொறியியலாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .