Suganthini Ratnam / 2016 ஜூன் 17 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்,வடிவேல் சக்திவேல்
ஊடகவியலாளரும் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குழுவின் அமைப்பாளருமான ப்ரெடி கமகே மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலைக் கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்குமாறு கோரயும் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்துக்கு முன்னராக உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைரராஜசிங்கம், மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்;;, மாகாண சபை உறுப்பினர்களான எம்.நடராஜா, ஞா.கிருஸ்ணப்பிள்ளை த.தே.கூ.வின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஊடகத்துறை அமைச்சருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் அனுப்பிவைக்கப்படவுள்ள மகஜரில், 'ஊடகவியலாளர் ப்ரெடி கமகே தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கவும் கோருகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சியின் கீழும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டித்துள்ள தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இது ஊடகவியலாளர்களின் கடமைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதாக நோக்குகின்றது.
இந்நிலையில், நீர்கொழும்பு மாநகர சபைக்குள் வைத்து ஊடகவியலாளர் ப்ரெடி கமகே கடந்த 2ஆம் திகதி தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனவே, இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதுடன், இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்' என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மட்டக்களப்பு மாவட்ட சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவையின் தலைவரும் சமூக சேவையாளருமான ஏ.எல்.மீராசாகிப் இங்கு தெரிவிக்கையில், 'ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்' என்றார்.
'நாட்டில் நல்லாட்சி நிலவும் இக்கால கட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் வேதனை தருகின்றது. ஊடகவியலாளர்கள் சமூகத்தில் மிக முக்கியமானவர்கள். அவர்களின் ஊடகப்பணிக்கு இடையூறாக இருக்கக்கூடாது. அவர்களின் ஊடகப்பணியை சுதந்திரமாகச் செய்ய அனைத்துத் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும். ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை இன்றைய நல்லாட்சி அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவிக்கையில், 'இந்த நல்லட்சி அரசாங்கத்தில் ஊடகவியலாளர் ப்ரெடி கமகே தாக்கப்பட்டமையே கடைசித் தாக்குதலாக இருக்க வேண்டும். இனிமேலும் இந்த நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது.
ஊடகவியலாளர்களுக்கு எதிரதான தாக்குதல்கள் இனிமேலும் இடம்பெறுமானால், அரசியல்வாதிகளான நாங்களும் ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த நாட்டிலுள்ள நல்லாட்சி அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறுகின்றேன். நாட்டில் நல்லாட்சியைக் கொண்டுவருவதற்கு இந்த நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்கியமை போன்று ஊடகவியலாளர்களும் பங்குதாரர்களாக உள்ளார்கள்' என்றார்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago