2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சம்பளத்துக்கு வேலை செய்வதைவிட, சமுதாயத்துக்கு வேலை செய்வது சிறப்பு

வடிவேல் சக்திவேல்   / 2017 நவம்பர் 19 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பளத்துக்கு வேலை செய்வதைவிட, சமுதாயத்துக்கு வேலை செய்வது சிறப்பானதாகும். சம்பளத்தைப் பொதுமக்கள் திருப்திகரமாகச் சொல்லமாட்டார்கள். ஆனால் நாம் செய்யும் வேலையை திருப்திகரமாகவும், மனச்சாட்சிக்கு நேர்மையாகவும் செய்தால், மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என, மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என். மணிவண்ணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 'முறையான திண்மக்கழிவகற்றல் சம்மந்தமான தெளிவூட்டல் நிகழ்வு இன்று (19) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.  அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரச கடமையை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு ஒப்படைக்கும் வேலைகளைச் சரியாகச் செய்யவேண்டும். எங்கேயோ யாருக்கோ பதில் சொல்லவேண்டும். உங்கள் வேலைகளை அர்ப்பணிப்புடன் செய்யும் போது கடவுள் எங்களை ஆசீர்வாதிப்பார்.

“எமது வேலையை சிறப்பாக செய்தாலும், குறை காண்பதே மனித இயல்பாகும். அதற்கு நாங்கள் ஒருபோதும் பயப்பட வேண்டாம். உங்களின் ஒத்துழைப்புகள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு மிகவும் முக்கியமானது.

“இன்று எமது மாநகரசபைக்கு முக்கியமான பிரச்சினை, திருப்பெருந்துறை குப்பைப் பிரச்சினையாகும். இந்தத் திருப்பெருந்துறை குப்பை பிரச்சினைக்கு விரைவில் நீதிமன்றத் தீர்வு கிடைக்கும். மனிதன் உயிர்வாழும் வரை குப்பைப் பிரச்சினை இருந்துகொண்டே தான் இருக்கும். கழிவுகள் தவிர்க்கப்படாத ஒன்றாகத்தான் இருக்கும்.

“கழிவுகளைப் பாடசாலைகளிலும் வீடுகளிலும், அரச திணைக்களங்களிலும் சரியாக முகாமை செய்தால், குப்பைப் பிரச்சினை தோன்றாது. வீடுவீடாக முறையாகச் சேகரிக்கப்பட வேண்டும். வீடுகளில் மூன்று வகையாகத் தரம்பிரித்து, தங்களின் குப்பைகளைப் பொதுமக்கள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக உக்கக்கூடியது, உக்க முடியாதது, இலத்திரனியல் கழிவுகள் என்று தரம்பிரித்து வைக்க வேண்டும்.

“எதிர்வரும் 28 ஆம் திகதிக்குப் பின்னர் லயன்கழகம், மாணவர்கள், சாரணர்களை கொண்டு, வீடு வீடாகத் திண்மக் கழிவகற்றல் சம்பந்தமாகப் போதியளவு தெளிவூட்டவுள்ளோம்.

“அதன் பின்னர், பொதுமக்கள் முறையான திண்மக்கழிவகற்றலைச் செய்யவேண்டும். வெற்றுக் காணிகளிலோ, பொதுஇடங்களிலோ, வடிகான்களிலோ, வீதிகளிலோ குப்பைகளையும் கழிவுகளையும் வீசக்கூடாது. அவ்வாறு வீசுபவர்கள் இனங்காணப்பட்டால், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்து, தண்டப்பணம் அறவிடப்படும் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X