2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’சிங்களக் குடியேற்றங்களுக்கு துணை போகவேண்டாம்’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

உங்கள் பதவியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, சிங்களக் குடும்பங்களை அடாத்தாக குடியேற்ற முயல்வது உள்ளிட்ட பிழையான விடயங்களுக்கு அதிகாரிகள் துணை போகவேண்டாமெனவும் மீறுச் செயற்பட்டால் மக்கள் உங்களுக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவார்கள் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார் 

மட்டக்களப்பு, பஸார் வீதியிலுள்ள கிழக்கு ஊடாக மன்றத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை என்கின்ற மாங்கேணி கிராம அதிகாரிக்குட்பட்ட தெற்கு பிரதேசத்தில் 178 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த மக்களைக் குடியேற்றுவதற்கான செயற்றிட்டம் மிகவும் துரிதமாக நடைபெற்றுகின்றது.  

“அந்தப் பகுதியில் குடியிருந்த சிங்கள மக்கள் குடியிருந்து 1985ஆம் ஆண்டு யுத்த சூழல் காரணமாக் இடம்பெயர்ந்ததாக காரணம் காட்டுகின்றனர். அந்த 178 குடும்பங்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் இங்கு இருக்கவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது. இந்தச் செயற்றிட்டம் 2011 ஆரம்பிக்கப்பட்ட போது,  இது தொடர்பாக நான் காணி அமைச்சருடன் கலந்துரையாடி அதனை தடுத்து நிறுத்தியிருந்தேன்.  

“திம்புலாகல தேரரால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்தத் திட்டம், 2015 கிழக்கு மாகாண ஆளுநராக ஒஸ்ரின் பெர்ணான்டோ இருக்கும் போது, 178 பேருடைய ஆவணத்துடன் தேரர் சென்றபோது, அவை பொய்யான ஆவணங்கள் என  காணி உதவி ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. 

“இந்நிலையில், அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கையில், அந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 178 பேருக்கும் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 1985 வெளியேறியிருந்தால் 1981ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் அதனைக் கொடுப்பது நியாயமானது. ஆனால், அவ்வாறு இல்லை. 

“178 குடும்பம் இருப்பதாக இருந்தால் அங்கு பௌத்த விகாரை இருந்திருக்கும்; பாடசாலை போன்ற பல கட்டிடங்கள் இருந்திருக்கும்; அந்த பகுதி மாணவர்கள் எந்தப் பாடசாலையில் கல்வி கற்றார்கள், பிறப்புசாட்சி பத்திரம் இருக்கும். எனவே, சரியான முறையில் ஆவணங்கள் காட்டப்படவேண்டும். அப்போது அங்கு  அவ்வாறனவர்கள் இருக்கவில்லை என அப்போதைய அந்த பகுதி கிராம சேவகராக இருந்த கென்றி என்பவர் தெரிவித்துள்ளார். எனவே, அங்கு 178 குடும்பங்கள் இருக்கவில்லை என்பது தான் உண்மை.

“அதேவேளை, இவர்களுக்கான அனுமதிப்பத்திரம் இதுவரை மாவட்டச் செயலகத்தில் வழங்கப்படவில்லை. ஆனால், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கையொப்பமிட்ட காணி உத்தியோகத்தர், அம்பாறையைச் சேர்ந்த உத்தியோகத்தர். அவர் எவ்வாறு இங்கு கடமை மேற்கொள்ளமுடியும். ஆகவே இது முழுக்க முழுக்க சட்டவிரோதமான  நடவடிக்கை. அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். எல்லாம் போலியானவை. திட்டமிட்டவகையில் குடியேற்ற போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு சில தமிழ் அதிகாரிகள் துணைபோயிருக்கின்றனர்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .