2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘தொழிலை உருவாக்கி தொழில் வழங்குவோராக பட்டதாரிகள் மாற வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்வி முறையினூடாக தங்களுக்கான பொருத்தமான தொழிலை உருவாக்கிக் கொண்டவர்களாகவும் தொழிலற்ற ஏனையவர்களுக்கு தொழில் வழங்கக் கூடியவர்களாகவும் உருவாக வேண்டும்” என, இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்று வந்த காண்பியற் கலையினூடாக சமூகப் பிரக்ஞையை வெளிப்டுத்தும் இறுதி  நிகழ்வின்போது, இன்று (27) அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் குறிப்பிட்ட பணிப்பாளர் கலாநிதி ஜெய்சங்கர்,

“நம்மைச் சூழ, கவின்கலை (அழகியற்கலை) சார்ந்து பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஆனால், சமகாலப் புரிதலில் கலைப் பட்டதாரிகள் எனக் கருதும்போது ஆசிரியத் தொழில் என்று மட்டுமே மனதில் பதியப்பட்டுள்ளது.

“உண்மையில் எழில் கலையில் (கவின் கலை) பல்வேறு புத்தாக்கத் துறைகள் உள்ளன.அதனால், இவற்றை உள்வாங்கி எங்களது கல்விச் செயற்பாடுகளை வடிவமைத்துக் கொண்டு செல்கின்றோம்.

“இதனூடாக கலைப் பட்டதாரிகள் தொழில் ரீதியாக தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளக் கூடியவர்களாகவும், உள்ளூர் வளங்களிலிருந்து உச்ச பயனைப் பெற்று  நாட்டுக்கும் சமூகத்துக்கும் சிறந்த பயனுடையவர்களாகவும் சிறந்த மனித வளமாகவும் மாற முடியும்.

“பட்டதாரிகள் என்போர் ஆளுமையும், ஆற்றலும் ஒருங்கே பெற்றவர்களாகவும் அவர்களது ஒவ்வொரு அசைவும் முன்மாதிரி நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

“படித்ததைப் படிப்பிப்பவர்களாக ஆற்றுகைக் கலைகளில் பட்டம் பெற்றவர்கள் இருக்க முடியாது. உண்மையில் எதிர்காலத்தில் வேலையில்லாப் பட்டதாரிகள் என்ற கையறு நிலையை இந்த சிந்தனைப் போக்கு மாற்றியமைக்கும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X