2025 மே 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் பொது விளையாட்டு மைதானத்தை அமைக்குமாறு வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்கு, இருதயபுரம் மத்தி, ஞானசூரியம் சதுக்கம், திசவீரசிங்க சதுக்கம், கூழாவடி, கூழாவடி கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள இளைஞர், யுவதிகள், பாடசாலை மாணவர்கள் ஆகியோரின் நன்மை கருதி பொது விளையாட்டு மைதானம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு, வேண்டுகொள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் லோகிராஜா தீபாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று (20) அவர் மேலும் தெரிவித்ததாவது,

“மேற்படி உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளும், சுமார் 2,500க்கு மேற்பட்ட குடும்பங்களையும் 10,000க்கு மேற்பட்ட சனத்தொகையையும் கொண்டு அமைந்துள்ளன.

“இருந்த போதிலும்,  நீண்டகாலமாக  இங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு பொதுவான விளையாட்டு மைதானம் இல்லாதிருப்பது பெருங்குறையாகக் காணப்பட்டு வருகின்றது.

“இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர், யுவதிகள் தமது விளையாட்டு திறமைகளை வளர்க்க மைதானம் இன்மையால் பெரிதும் மழுங்கடிக்கப்பட்டுள்ளனர்.

“ஏற்கெனவே எமது இளைஞர்கள் விளையாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த சனிமவுன்ட் விளையாட்டு மைதானம், ஜெயந்திபுரம் பன்சாலைக்குரிய காணியாக சுவீகரிக்கப்பட்டுள்ளது.

“அதேநேரம் எமது கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தேசிய அரசாங்க மரக்கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணி, பற்றைகள் அடர்ந்து பராமரிப்பு காடு மண்டிக் கிடப்பதோடு, டெங்கு பரவும் சூழலுடன் காணப்படுகின்றது.

“அதேவேளை, இப்பகுதி பொதுமக்களுக்கு எவ்வகையிலும் பயன்படாததாகவும் காணப்படுகின்றது.

“எனவே, மரக்கூட்டுத்தாபனத்தை பொருத்தமான இடத்துக்கு மாற்றியமைப்பதோடு, அக்காணியை இப்பகுதி இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறமை மேம்படவும் பொதுமக்கள் தமது பொழுதைப் போக்கவும் வயோதிபர்கள், தமது தேகாரோக்கிய பயிற்சியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

“இது தொடர்பாக இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்கத்தால் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், மாநகர ஆணையாளர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலரிடமும் வேண்டுகோள்களை முன்வைத்துள்ளோம். ஆயினும், இதுவரை பயனேதும் கிட்டவில்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X