2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் நிறைவு

Suganthini Ratnam   / 2017 ஜூலை 26 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த 155 நாட்களாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவந்த சத்தியாக்கிரகப் போராட்டமானது, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உள்ளிட்டோரால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து செவ்வாய்க்கிழமை (25) மாலை முடிவுக்கு வந்துள்ளது.

அரசாங்க வேலைவாய்ப்புக் கோரி கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி முதல் காந்தி பூங்காவுக்கு முன்பாக இதுவரை காலமும் மேற்படி பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் போரட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தம்; கருணாகரன், இரா.துரைரட்னம் ஆகியோர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கிழக்கு மாகாணசபை எடுத்துக்கொண்ட நடவடிக்கை பற்றித் இவர்கள் தெரிவித்ததை அடுத்து, மேற்படி பட்டதாரிகள் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதிக்கும் 10ஆம் திகதிக்கும் இடையில், கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் 1,441 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்  வழங்கப்படும் என்பதுடன், அதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர்; ரோஹித்த போகொல்லாகமவும்  பொதுச் சேவைகள் ஆணைக்குழுவும் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாணசபை சார்பில் உறுதியளிப்பதாக  மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

அவ்வாறே, மத்திய அரசாங்கமும்  வேலையற்ற பட்டதாரிகள் 1,000 பேருக்கு கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத் தொழில்களை வழங்கவுள்ளது. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

ஆசிரியர் நியமனத்துக்காக இலகுவான போட்டிப் பரீட்சை நடத்தபடவுள்ளது. அப்பரீட்சையானது, பட்டதாரிகளை நிரல்படுத்தவேயாகும். அடுத்த வாரம் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதன் பின்னர், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட  பட்டதாரிகளுக்கு மாகாண விவசாய அமைச்சர் குளிர்பானம் வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு நகரில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவுக்கு வருவதுடன், கிழக்கு மாகாண சபையின் உறுதிமொழி நம்பிக்கை அளிப்பதாகவும் அம்மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷான் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X