2025 மே 08, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் 7,171 மாற்றுத்திறனாளிகள்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 7,171 மாற்றுத்திறனாளிகள்  உள்ளதாக மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகஸ்தர் எஸ்.அருள்மொழி தெரிவித்தார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று வியாழக்கிழமையாகும். இதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல், மட்டக்களப்பு ஈஸ்ட்லகூன் ஹோட்டலில்  செவ்வாய்க்கிழமை (01) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த மாற்றுத்திறனாளிகளில் 05 வயதுக்குட்பட்ட 213 பேரும் 05 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,355 பேரும்; 18 வயதுக்கு மேற்பட்ட 5,603 பேரும் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மொழிப்பிரச்சினை

அரசாங்க அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு செவிப்புலன் வலுவற்றோர் சென்றால், அங்கு  மொழிப்பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் இதைத்  தீர்ப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் செயலாளர் ரி.தேவதர்சன் தெரிவித்தார்.
'இவர்களின் மொழிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சைகைமொழி தெரிந்தவர்களை அங்கு நியமிக்கவேண்டும். அல்லது அங்குள்ள உத்தியோகஸ்தர்களில் ஒருவருக்கு சைகைமொழி கற்றுக்கொடுக்க வேண்டும்.   

தேசிய கல்வி நிறுவகத்தில் பயிற்றுவிக்கப்பட்ட சைகைமொழி தெரிந்த ஆசிரியர்களைக் கொண்டு செவிப்புலன் வலுவற்றோருக்கு கற்றுக்கொடுக்கும் வசதியை இம்மாவட்டத்தில் செய்யவேண்டும்.

செவிப்புலன்வலுவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம், உயர்தரம்வரை கல்வி கற்பதற்கான சிறந்த கல்வி நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை. எனவே, வடமாகாணத்தின்; கைதடியிலுள்ள நிலையம் போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்படவேண்டும்' எனவும் தெரிவித்தார்.

விசேட திட்டம்

மாற்றுத்திறனாளிகளின் நன்மை கருதி அவர்களுக்கு சைகைமொழியில் கருமங்களை ஆற்றுவதற்காக கிழக்கு மாகாணசபை விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களிலிருந்து உத்தியோகஸ்தர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு சைகைமொழி தொடர்பான 06 மாத பயிற்சி வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாணத்தின் சமூகசேவைகள் திணைக்களப்; பணிப்பாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு  மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியை இரட்டிப்பாக்கவும் கிழக்கு மாகாணசபையின் வரவு -செலவுத்திட்டத்தில் முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X