2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘வழங்கப்பட்ட வாக்குறுதிகள், நீர்மேல் எழுத்தாகிவிட்டன’

வா.கிருஸ்ணா   / 2018 ஜூலை 08 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டதாரிகளது தொழிலுரிமைப் போராட்டம், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை நல்லாட்சி அரசாங்கம் சார்ந்து, தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள், நீர்மேல் எழுத்தாகிவிட்டன என, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையின்போது, ஜனாதிபதிக்கு, நேற்று  (07) மகஜர் ஒன்றை கையளித்ததன் பின்னர், கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த, எமது தொழிலுரிமைப் போராட்டக் காலங்களில் வழங்கப்பட்ட தொழிலுரிமை கோரிய மகஜர்களுக்கும் ஜனாதிபதியுடனான நேரடி சந்திப்புகளுக்கும், இதுவரை இந்த நல்லாட்சி அரசாங்கம் செவிசாய்த்ததாய் இல்லை என்பதே உண்மை.

“எமது போராட்டங்களின் சிறு சமிக்கையாக, எதிர்காலத்தில் வழங்கப்படுவதற்கான 20,000 பட்டதாரி பயிலுநர் நியமனங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டபோதிலும், அவை இன்று இவ்வரசாங்கத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

“இந்த நல்லாட்சி அரசாங்கம், எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், தன்னிச்சைப் போக்காக நியமனத்தை இழுத்தடிப்பு செய்வதை, எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
“எனவே, தொடர்ந்து நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருப்பதை எம்மால் ஏற்கமுடியாது. பட்டதாரிகளுக்கு பாதகமாக அமையும் புள்ளி அடிப்படையிலான நியமனத்தை விடுத்து, பட்டம்பெற்ற வருட அடிப்படையில், 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளை முன்னுரிமைப்படுத்தி, அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க, இவ்வரசாங்கம் முன்வரவேண்டும்.

“இல்லையேல் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் பட்டதாரிகள் சுயேட்சையாக களமிறங்கி, எம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பாடம்புகட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X