Suganthini Ratnam / 2016 ஜூன் 23 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களை முடக்கும் எந்தவொரு சூழ்ச்சிகளையும் எமது மாகாண சபை முறியடிக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
நெல்சிப் திட்டத்தின் கீழ் 18.57 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு, ஓட்டமாவடிப் பாலத்தை அண்டியதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன மீன் சந்தையை நேற்;றுப் புதன்கிழமை மாலை திறந்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாண சபைக்குள்ள முழு அதிகார பலத்தையும் இம்மாகாணத்திலுள்ள சகல இன மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற சேவைக்காக பயன்படுத்துமே தவிர, அதனை ஒருபோதும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக துஷ்பிரயோகம் செய்யாது' என்றார்.
'அரசியல் சூழ்ச்சிகளைக் கண்டு மக்களுக்குச் சேவைகளைச் செய்யாது அஞ்சி ஒதுங்குகின்ற ஒரு மாகாண நிர்வாகமாக எனது தலைமையிலான மாகாண சபை ஒருபோதும் இருக்காது என்பதை நாங்கள் பல இடங்களிலும் நிரூபித்து வந்திருக்கின்றோம்.
இந்த நிகழ்வும் அதுபோல ஒன்றே. இந்த மீன் சந்தைக் கட்டடத்தொகுதியை மக்களுக்குக் கையளிப்பதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. எனினும், அவற்றை நாம் பிரதேச மக்களின் பலத்தோடு முறியடித்திருக்கிருக்கின்றோம்.
மாகாண சபைக்கு அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரத்தை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது.
தனது சொந்த நலன்களைக் கைவிட்டு, மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டும். மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அத்தனை சேவைகளையும் நாம் அரசியல் பலத்தோடு இருக்கும்பொழுது முடிந்ததைச் செய்து விட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இதில் மக்களைக் கேடயங்களாகவோ, பகடைக்காய்களாகவோ எவரும் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் எமக்கு அரசியல் பலத்தைத் தந்த மக்கள் பாதிக்கப்பட்டுப் போய் விடுவார்கள்.
கிழக்கின் முதலமைச்சரும் மாகாண அமைச்சர்களும் மாகாண நிர்வாகமும் ஒருபோதும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்காக இயங்கிக் கொண்டிருக்கவில்லை.
அரசியல் யாப்பில் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு தன்னாலான என்னென்ன சேவைகளை வழங்கலாமென சிந்தித்துக்கொண்டிருக்கின்றோமே தவிர, பெருமையடித்துக்கொண்டு மக்களுக்கு உரிய காலத்தில் கிடைக்கக்கூடிய சேவைகளைப் பின்தள்ளிப் போடுவதற்காக நாம் இயங்கிக் கொண்டிருக்கவில்லை. நேரான, சீரான, வெளிப்டைத் தன்மையான எங்களது கிழக்கு மாகாண சபையின் நல்லாட்சியை உள்ளிருந்தோ வெளியிலிருந்தோ குலைப்பதற்கும் குழப்புவதற்கும் ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை' எனவும் அவர் கூறினார்.


21 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
4 hours ago