Suganthini Ratnam / 2016 ஜூன் 17 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
நல்லாட்சி என்பதை வெறும் அரசியல் கோஷமாக மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாமல், உண்மையான அர்த்தமுள்ள நல்லாட்சியை நிறுவி மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்தது.
இது தொடர்பில் அம்முன்னணி நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'இது தொடர்பில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அராஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே புதிய ஆட்சியை நிறுவினர். இந்த ஆட்சி மாற்றத்துக்காக பொதுமக்களும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் பொது எதிரணியை வழிநடத்திய கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் தமது உயிரைப் பணயம் வைத்துப் போராடினர்.
கடந்த ஆட்சியின்போது தலைவிரித்தாடிய அராஜகம், ஜனநாயக விரோதச் செயற்பாடுகள், சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படாமை, ஊழல் மோசடி, வீண் விரயம், அதிகார மற்றும் பொதுச் சொத்துகளின் துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு காரணங்களை வைத்து மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.
மேற்சொன்ன தவறுகளைத் திருத்தி ஜனநாயக விழுமியங்களை மதித்தல், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல், நீதியை நிலை நிறுத்தல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுதல், ஊழல் மோசடிகளை ஒழித்தல், வீண் விரயம் இல்லாமல் செய்தல், வெளிப்படைத்தன்மையைப் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகத்தையே நாம் நல்லாட்சி அரசாங்கமாக எதிர்பார்த்தோம்.
மேற்படி பண்புகளைக் கொண்ட நல்லாட்சியை நிறுவுவதற்கு 2015 ஜனவரி 8 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் 2015 ஓகஸ்ட் 17 இல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மக்கள் தமது ஆணையை வழங்கினர்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடும்போது, பல்வேறு முன்னேற்றங்களும் நல்ல மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதை நாம் பாராட்டுகிறோம். ஆனால், தற்போதைய அரசாங்கம் நல்லாட்சிப் பண்புகளை படிப்படியாக இழந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அது குறித்த எமது அவதானங்களையும் அதிருப்தியையும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம். நாமும் ஆட்சி மாற்றத்தின் பங்குதாரர்கள் என்ற தார்மீக உரிமையோடு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
1. கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் சம்பந்தமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், அவை திருப்தியளிப்பதாக இல்லை. எனவே, இவ்விடயம் குறித்து இதனை விட வினைத்திறன் மிக்கதாகவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்.
கடந்த ஆட்சியின்போது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தற்போது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுச் செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் விடயத்தில் பக்கச்சார்பற்ற விசாரரணைகள் நடத்தப்பட வேண்டும்.
2. இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடிய பகை மற்றும் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய பிரசாரங்களை நிறுத்துவதற்கு உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செய்திகளை, தகவல்களை பிரசுரித்தல் ஒலி, ஒளி பரப்புச் செய்தல், சமூக வலைத்தளங்களில் பரப்புதல் போன்றவை சட்ட ரீதியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
3. புதிதாக அமைக்கப்படும் அல்லது விஸ்தரிக்கப்படும் கல்விக்கூடங்கள், சமய வழிபாட்டுத்தலங்கள், கலாசார நிலையங்கள் தொடர்பான விடயங்களை உத்தியோகபூர்வமாக அரசாங்க நிறுவனங்களும் அதிகாரிகளும் மாத்திரமே கையாள வேண்டும். இவ்வாறான விடயங்களில் மத குருமார்களோ, சமூக நிறுவனங்களோ தலையிடுவது முற்றாக தடுக்கப்படல் வேண்டும். இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்திருக்கும் நபர்கள், இயக்கங்கள் தொடர்பில் அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
4. நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்ற வகையில் பொதுமக்கள் மீது வரிச்சுமைகளை படிப்படியாக அதிகரிப்பதைவிட்டு, அரசாங்க நிர்வாகத்தை கொண்டு நடத்துவதில் சிக்கனமும் எளிமையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஜனாதிபதி, பிரதமரின் நாளாந்த நிர்வாகச் செலவுகள் உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உறுப்பினர்கள், போன்றவர்களின் நிர்வாகச் செலவுகள் என்ற பெயரில் கட்டடங்களுக்காகவும் அதிசொகுசு வாகனங்களுக்காகவும் ஆடம்பர வசிப்பிடங்களுக்காகவும் செய்யப்படும் மேலதிக செலவுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5. இயற்கை, செயற்கை அனர்த்தங்களால் அசாதாரண சூழ்நிலைகளை மக்கள் எதிர்கொள்ளும்போது, அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதில் அரசாங்கம் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது அரசாங்கம் போதிய தயார் நிலையில் இருக்கவில்லை என்பது அண்மைக்கால மண்சரிவுகள் வெள்ள அனர்த்தம் மற்றும் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் போன்ற சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டன.
இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது சிவில் சமூக சமய நிறுவனங்கள், பொதுமக்கள் இன மத பிரதேச வேறுபாடின்றி பரஸ்பரம் உதவிகள் ஒத்தாசைகளை வழங்கி நிலைமைகளை சமாளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 100 சதவீதம் அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டிய விடயங்களில் குறிப்பாக, சாலாவ இராணுவ முகாம் பாதிக்கப்பட்ட விடயத்தில் கூட அரசாங்கம் அசிரத்தையாக நடந்துகொண்டமை கண்டிக்கத்தக்கதாகும். எனவே, இவ்விடயத்தில் உரிய கவனத்தைச் செலுத்தி அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவருவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாம் மேற்சொன்ன விடயங்களை ஜனாதிபதியும்; பிரதமரும் கவனத்தில் எடுத்து நல்லாட்சி அரசாங்கம் என்பதை வெறும் கோஷமாக மாத்திரம் வரையறுத்துக்கொள்ளாமல், உண்மையான அர்த்தமுள்ள நல்லாட்சியை நிறுவி மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்' என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago