2025 மே 08, வியாழக்கிழமை

'3,767 ஆசிரியர்கள் எதுவித கொடுப்பனவும் இன்றி பணியாற்றுகின்றனர்'

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் 3,767 ஆசிரியர்கள் எதுவித கொடுப்பனவும் இன்றி தமது ஆசிரிய பணியை ஆற்றிவருவதாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கப்பி கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு வில்லியம் ஓட் மண்டபத்தில் கப்பி கிட்ஸ் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

குழந்தைகளில் கூடிய கவனம் செலுத்தவேண்டிய காலகட்டம் இதுவாகும்.இன்று சிறுவர்கள் தொடர்பான பல கவலைத்தரும் விடயங்கள் நாளாந்தம் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகின்றது.குழந்தைகள் தொடர்பான அக்கரையினை பெற்றோர் மட்டுமன்றி அனைத்து சமூகமும் எடுக்கவேண்டிய காலகட்டம் இதுவாகும்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாலர் பாடசாலை பணியகம் பாலர் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றினை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கை கல்வி அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடந்தவாரம் கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளிகளில் 4,064 ஆசிரியர்கள் உள்ளனர்.இவர்களில் எதுவித கொடுப்பனவும் பெறாமல் 3,767 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தினை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கையினை கல்வி அமைச்சரும் முதலமைச்சரும் எடுத்துவருகின்றனர்.

நாங்கள் எமது குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.வெளிநாடுகளில் முன்பள்ளியை நடத்துபவர்கள் பேராசிரியர்களாகவும் கலாநிதிகளாகவும் உள்ளனர்.ஆனால் எமது கிழக்கு மாகாணத்தினை எடுத்துக்கொண்டால் எட்டாம் தரம் சித்திபெற்றவர்கள் கூட பாலர் பாடசாலை ஆசிரியர்களாகவுள்ளனர்.

அவர்களை நாங்கள் ஒதுக்கிவிடமுடியாது.அவர்களின் கல்வியை மேம்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X