Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
'ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களையும் வளங்களையும் பகிர்ந்துகொள்ளும் தீர்வுத்திட்டத்தை இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் இந்த வருடத்துக்குள் பெற்றுக்கொள்வோம்' என தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டுப் கலந்துரையாடல் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று வியாழக்கிழமை அப்பாடசாலையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இந்த நாட்டில் நாங்கள் இன்று சுதந்திரக்காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நிலை இருக்கவில்லை.
நாங்கள் தமிழ் மக்கள், இந்த நாட்டின் சொந்தக்காரர்கள், உரிமையாளர்கள். நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல. யாரையும் அடிமைப்படுத்தவும் மாட்டோம்.
எங்களுக்கு சமவுரிமை தேவையாகவுள்ளது. ஐக்கியம் தேவையென்றால், அதற்கு முன்னராக சமத்துவம் கட்டியெழுப்பப்பட வேண்டும். சமத்துவம் இல்லாவிட்டால், ஐக்கியம் ஏற்படாது. அதற்காக அரசாங்கத்துக்கு வெளியே இருந்து எம்மவர்கள் போராடும்போது, அரசாங்கத்துக்குள் இருந்து நான் போராடுகின்றேன்.
இந்த அரசாங்கத்தின் மூலம் எமக்கு எல்லாம் கிடைத்துள்ளதெனக் கூறுவதற்கு நான் வரவில்லை. நீங்களும் அவ்வாறு கூறவேண்டாம். அதேபோன்று, எதுவும் கிடைக்கவில்லையென்று ஒப்பாரி வைக்கவும் வேண்டாம். நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும். இருப்பதையும் இழக்கும் நிலைக்கு நாம்; செல்லக்கூடாது.
எங்களுக்கு இன்று ஒரு வழியேற்பட்டுள்ளது. அதன் மூலம் காத்திரமாக முன்நகர வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும். அரசியல், கலாசார, பொருளாதார, கல்வி ரீதிகளாக நாங்கள் முன்னேறுவோம். இவற்றுக்காக அவகாசத்தை இந்த ஆட்சியாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்வோம். ஏனென்றால், இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் தமிழ் பேசும் மக்கள். இலங்கையின் சகல பகுதிகளிலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் இணைந்து கடந்த ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டியடித்து புதிய ஆட்சியை உருவாக்கினார்கள். அதன் காரணமாக அரசாங்கத்துக்குள் இருந்து அனைத்தையும் பெறவேண்டிய தேவை எமக்குள்ளது. அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு, வெளியில் இருந்துகொண்டு வேடிக்கை பார்க்க முடியாது.
இன்று ஒரு நாட்டுக்குள் வளங்களை பகிர்ந்துகொண்டு அதிகாரங்களை பகிர்ந்துகொண்டு வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளளோம். அவ்வாறே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வந்துள்ளது. தமிழ் முற்போக்கு முன்னணியும் வந்துள்ளது.
இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தை செயற்படுத்த முன்னாள் ஜனாதிபதி தலைமையில் சிலர் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இனவாதிகள், மதவாதிகள், அடிப்படை வாதிகளை வைத்துக்கொண்டே அரசியலை முன்னெடுக்க வேண்டுமெனச் சிலர் நினைக்கின்றனர். இந்த அரசாங்கத்தில் இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளியோம் என்பதை தெளிவாகக் கூற விரும்புகின்றேன். மீண்டும் இந்த நாட்டை மோசமான நிலைக்குச் கொண்டுசெல்ல இவர்கள் தலைகீழாக நின்றாலும் நாம் இடமளியோம்.
தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை தமிழர்களுக்காக அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கப்பட்ட உளவியல் சிகிச்சையே தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட நிகழ்வாகும். இது பெரும்பான்மையின மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்டது அல்ல. அவர்களுக்கு வழங்கப்பட்ட உளவியல் சிகிச்சையாகும்.
இன்று பெரும்பான்மையின மக்கள் மத்தியில் மன மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. பெரும்பான்மையின மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது. சமாதானத்தை ஏற்படுத்த முடியாது.
இந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் ஒரே நாடு என்ற அபிப்பிராயம் உருவாகியுள்ளது. ஒரே நாடு என்பது ஒரே மொழி, ஓர் இனம் என்று அர்த்தம் அல்ல. பல்லினம் கொண்ட நாடு ஆகும். தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்று கூறுபவர்களே இன்றைய பிரிவினைவாதிகளாகவுள்ளனர். நாட்டு மக்களை இன அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பிரிப்பார்களானால், அவர்களே உண்மையான பிரிவினைவாதிகள்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
7 hours ago
8 hours ago