Suganthini Ratnam / 2016 ஜூன் 10 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்
கடந்த காலத்தில் தமிழர் போராட்ட அரசியலில் முஸ்லிம்களால் ஒத்துழைக்க முடியாத நிலை இருந்தது. அதற்கு பல காரணங்கள் இருந்தன. ஆனால் அதனை மட்டும் வைத்துக்கொண்டு போராளிகள் செயற்பட்ட விதத்திலேயே மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களும் நடந்துகொள்வார்கள் என முஸ்லிம் தலைமைகள் நினைக்கக்கூடாது என கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்துக்கு 21 மில்லியன் ரூபாய் செலவில் சகல வசதிகளையும் கொண்டதாக இரண்டு மாடியில் புதிய அலுவலகம் அமைப்பதற்தகான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை திணைக்களத்தின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்த நாடு முழு நாடாக இயங்கியது கிடையாது. சுதந்திரத்துக்காகவும் இந்த நாட்டுக்காகவும் போராடிய தமிழ்த் தலைவர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் காரணமாகவே தமிழர்கள் தங்களைக் காப்பற்ற வேண்டும் என்ற சிந்தனைக்குள் வரவேண்டிய நிலையேற்பட்டது. அந்த அரசியல் நிலைமைகளின் வரலாறு இந்த நாட்டின் வரலாற்றில் துன்பியல் வரலாறாகவே முடிந்துள்ளது.
அந்த துன்பியல் வரலாறு 2009ஆம் ஆண்டு முள்ளியவாய்க்காலில் நடைபெற்று முடிந்த பெரிய துன்பியல் நிகழ்வோடு முடிந்து அடுத்த அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது. அந்த அத்தியாயமும் ஆரம்பத்தில் மிகவும் கொடூரமாக எழுதப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சுமுகமான அரசியல் நிலைமையை நடைமுறைப்படுத்துகின்ற நிகழ்கால வரலாறு நடைபெற்றுக்கொண்டுள்ளது' என்றார்.
'தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் இந்தக்காலம் மிகமிக முக்கியமான காலமாகும். தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான காலமாகும். புயலுக்கு முந்திய அமைதி போலவே சமாதான காலங்கள் எல்லாம் வந்துள்ளன. ஓரு குறிப்பிட்ட சமாதான காலத்திலேயே ஒருவரையொருவர் எவ்வாறு ஏமாற்றுவது என்பதே பெரும்பான்மை அரசியல்வாதிகளின் மாறாத வரலாறாக இருந்துவருகின்றது. சிறுபான்மை சமூகத்தினை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே இலங்கை அரசாங்கங்கள் செய்துவந்துள்ளன. இந்த நல்லாட்சியில் அவ்வாறான நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என நாங்கள் நம்புகின்றோம்.
இந்த வேளையில் தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும். உலக வரலாற்றில் சமாதானம் ஏற்படுத்தப்பட்ட கால வரலாறுகளை அரசியலாளர்கள் உள்வாங்கி அதனை மக்களிடம் கொண்டுசென்று தெளிவுபடுத்த வேண்டியதே தற்போதுள்ள அர்த்தபூர்வமான அரசியலாகும்.
இலங்கையை பொறுத்தவரையிலும் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பல உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இலங்கையில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்களுடன் ஐ.நா. சபையில் அழுத்தங்களைக் கொடுத்தாலும் கூட எங்களது அரசியல் விடுதலை என்பது எங்களுடன் உள்ள பெரும்பான்மையினத்துடன் நாங்கள் ஏற்படுத்துகின்ற நல்லிணக்கம் என்ற காரணத்தினால் உருவாக்கப்பட்டு நீடித்து நிலைத்து நிற்கும்.
நாங்கள் உருவாக்குகின்ற அரசியலமைப்பு நீடித்து நிலைத்து நிற்கவேண்டும். மூன்றாவது அரசியலமைப்பினை உருவாக்கும் நிலையில் உள்ளோம் என்றால் முன்பிருந்த அரசியலமைப்பு நாடாளுமன்றத்தினால் மாற்றியமைக்கப்படுகின்றன என்பதை உணர்ந்துகொண்டால் நான்காவது அரசியலமைப்பு ஒன்று உருவாகாதவகையில் ஒரு நல்லிணக்கம் இருக்கவேண்டும்.
பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை சமூகம் தொடர்பில் ஒரு ஐயப்பாட்டில் உள்ளனர். தமிழர்கள் தனிநாட்டை உருவாக்கி தமிழ்நாட்டுடன் இணைக்கப் போகின்றார்கள், அதன் மூலம் இந்த நாட்டை துண்டாடப்போகின்றார்கள் என்ற வித்து ஒன்று பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் எத்தனை தடவை மறுத்தாலும் அதனையே தூக்கிப்பிடித்துக்கொண்டு அரசியல்செய்ய இனவாதிகள் முயற்சிக்கின்றனர். கூட்டு எதிர்க்கட்சியென்று பெயரைக்கொண்டுள்ளவர்கள் இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொய் கூறுகின்றனர். சமஷ்டி என்ற போர்வையில் இந்த நாட்டினை பிரித்து தனிநாடு உருவாக்கப்போகின்றார்கள் என்று கூறுகின்றனர். இது பொய் என்பதை தென்பகுதி மக்களுக்கு கூறவேண்டியது சிறுபான்மை அரசியல்வாதிகளின் மிக முக்கிய கடமையாகவுள்ளது.
பெரும்பான்மை தலைவர்கள் ஒன்றை உறுதியாக நம்பவேண்டும். நாங்கள் எந்தவித கபடத்தனமும் அற்றவர்களாகவே சமஷ்டியை கோருகின்றோம். 1949ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட அன்றே இது வலியுறுத்தப்பட்டது.
எங்களது கோரிக்கையில் தர்மம் இருக்கின்றது என்ற காரணத்தினால்தான் இன்றும் நாங்கள் எழுந்து நிற்கின்றோம். அந்த தர்மத்தினை நாங்கள் சரியான முறையில் கடைப்பிடிக்கின்றோம் என்பதனாலும் உண்மையாக நாங்கள் அரசியல் செய்கி;ன்றோம் என்பதும் சாத்வீகமே எமது கொள்கை என்பதையும் வெளிப்படையாக காட்டவேண்டிய கட்டத்தில் தமிழ் அரசியல் உள்ளது.
சாத்வீக வழியில் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அர்ப்பணிப்புள்ள அரசியல்வாதிகள் இருக்கும்போது எமது விடுதலையினை பெற்றெடுக்கமுடியும். வடகிழக்கினைப் பொறுத்தவரையில் எங்களுக்கெல்லாம் இருக்கும் எதிர்காலம் ஒன்று என்பதை உணர்ந்து தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைமைகள் மிக பக்குவமாக கடமையாற்றவேண்டிய நிலையில் உள்ளோம்.
கடந்த காலத்தில் தமிழ் போராட்ட அரசியல் வரலாற்றில் பல காரணங்களினால் முஸ்லிம்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாத நிலையிருந்தது. அதனை மட்டும் வைத்துக்கொண்டு போராளிகள் செயற்பட்ட அதே விதத்திலேயே தற்போதுள்ள மிதவாத அரசியல்வாதிகளும் செயற்படுவார்கள் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைக்ககூடாது.
முஸ்லிம் அரசியல்வாதிகளை அரசியலுக்குள் இழுத்துவந்தவர்கள் எமது தமிழ் அரசியல் தலைவர்கள் என்ற அந்த நல்ல பாடத்தினை எண்ணிப்பார்க்க வேண்டும்.
எந்தவொரு காலத்திலும் மிதவாத தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம் அரசியல் தலைமைகளை முஸ்லிம் மக்களை ஏமாற்றியது கிடையாது.ஏமாற்றவும் மாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் தலைமைகள் கைகோர்க்க வேண்டும். இந்த 30 வருட காலத்தில் பல மூலோபாயங்களை முஸ்லிம் தலைவர்கள் வகுத்துள்ளார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இங்கிருந்த தீவிரவாத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை அதுநியாயமாக இருக்கலாம் என்பது எங்களது எண்ணமாகும். ஆனால் இனிமேலும் அதேவியூகத்திலே சத்தமில்லாமல் தமிழ் அரசியலை தோற்கடிக்கும் வகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்படக்கூடாது என்பதனை உரிமையோடு சொல்லிவைக்கின்றேன்.
நாங்கள் ஒன்றுடன் ஒன்று தங்கியிருக்கவேண்டும்.எல்லா இடங்களிலும் நாங்கள் ஒன்றித்துவாழக்கூடியவர்கள் என்ற உணர்வுவந்துவிட்டால் எங்களுக்குள் இருக்கும் சந்தேகங்கள் களைந்துவிடும். தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரு அரசியல் அமைப்பினை முன்வைக்க முன்வந்தால் பெரும்பான்மை சமூகம் தலைவணங்கியே ஆகவேண்டும்.அந்த அரசியலமைப்பினை நிராகரித்துவிட்டு பெரும்பான்மை இந்த நாட்டில் ஆட்சியை நடாத்தமுடியாது. உண்மைத்துவத்தை யதார்த்ததை உணர்ந்து மூன்று இனங்களும் இணைந்து மும்முனை இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நாட்டினை இலங்கையாகவே வைத்திருக்கமுடியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
21 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago