2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'சமஷ்டி முறையிலான தீர்வுக்காக த.தே.கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தீர்மானம்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 19 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

கிழக்கு மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத்தில் சமஷ்டி முறைத் தீர்வுக்காக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் துணைத் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரெட்னம்; தெரிவித்தார்.

ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமுமான பத்மநபா உட்பட  உயிர்நீத்த போராளிகளின் 26ஆவது ஆண்டு தியாகிகள்; நினைவுதின நிகழ்வு, மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'யுத்தம் மௌனித்த நிலையில் வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி தொடர்பில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கத்திடம் முன்வைத்தபோது, நாடாளுமன்றத்தில் முன்வைத்து அங்கு பேசுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டது' என்றார்.

'பிரிந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை 1987ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை சட்ட ரீதியாக இணைத்து அம்மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக உரமிட்ட பெருமை ஈழமக்கள் புரட்சிகர முன்னணிக்கு உண்டு' என்றார்.

 'முதற்படியாக தமிழ் நிர்வாக அதிகாரத்தை அமுல்படுத்தும் மாகாண சபை முறைமை, இலங்கை -இந்திய ஒப்பந்தம், 13ஆவது அரசியலமைப்புச் சட்டம் என்பவற்றை அமுலாக்கிய பெருமைக்குரிய எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் சுமார் 35,000 அரச உத்தியோகஸ்தர்களை வேலை செய்யும் நிலைக்கு கொண்டு சென்றது' எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின்  ஸ்தாபகரும் செயலாளர் நாயகமுமான பத்மநபா உள்ளிட்ட உயிர்நீத்த போராளிகள் மற்றும் பொது மக்களின் 26ஆவது ஆண்டு தியாகிகள் நினைவுதின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை  மட்டக்களப்பு போக்கஸ் மண்டபத்திலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ் பெருமாள், மட்டக்களப்பு தொகுதி முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X