2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'ஜனாதிபதியும் பிரதமரும் நம்பிக்கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவரும் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழர்களின் நம்பிக்கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற  இல்ல விளையாட்டுப்போட்டியில்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவுக்கு இணைக்கப்படும்; மாணவர்களின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  தமிழர்களின் கல்வி சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் 15 ஆண்டுகளில் உயரதிகாரிகள் உருவாகுவதற்கான வீழ்ச்சியை எமது சமூகம் எதிர்நோக்கியுள்ளது.

இன்று பாடசாலை இடைவிலகலை பொறுத்தவரையில் இலங்கையில் ஏனைய சமூகங்களை விட தமிழ்ச் சமூகத்தில் அதிகரித்துள்ளது. சுமார் ஒன்றரை இலட்சம் மாணவர்களின் இடைவிலகல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழரின் கல்வியை மேம்படுத்த வேண்டும். இதற்காக வேறுபாடுகளைக்; களைந்து ஒன்றுபடவேண்டும்.

இந்த நாட்டின் ஆட்சி மாற்றம் ஊடாக தமிழருக்கு நல்ல தீர்வு கிடைக்குமென்று நாம் எதிர்பார்த்திருந்தோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்ப் பிரதேச செயலகங்களில் தமிழ்ப் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு அச்சமடையும் இந்த அரசாங்கம், எவ்வாறு தமிழருக்கு  தீர்வு வழங்கப்போகின்றது என்பது பற்றிச் சிந்திக்கவேண்டும்.

நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கம் தமிழருக்கு வழங்கும் தீர்வை வழங்கவேண்டும். எமது சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒத்துழைக்கவேண்டும். இல்லாதுபோனால், எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்பையே நல்லாட்சி அரசாங்கமும் எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X