2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'த.தே.கூ. முன்வைத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 13 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா,பைஷல் இஸ்மாயில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி, உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புவேளை விவாதப் பிரேரணையை சமர்ப்பித்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், அதன் பின்னர் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன், இப்பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை  அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, இராணுவ இடையூறுகள், அபிவிருத்தி மற்றும் தொழில் வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை அவர் முன்வைத்திருந்தார்' என்றார்.  

'மேலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதி என்ற வகையில் நான் கடந்த காலத்தில் அப்பகுதிகளில் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கல்விப் பிரச்சினை, பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை, மீள்குடியேற்றம், அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்திருந்தேன்.

எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு  உரிய தீரவைப் பெற்றுக்கொடுப்பதற்கு  நல்லாட்சி அரசாங்கம்  நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X