Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'மனித உழைப்பை இயந்திரங்களிடம் விட்டு விட்டதால் ஆரோக்கியக் கேடும் சூழல் பாதிப்பும் ஏற்பட்டு ஒரு நச்சுச் சூழலுக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்' இவ்வாறு ஏறாவூர் நகர மிச்நகர் பகுதி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.எச்.எம்.அஸீம் தெரிவித்தார்.
கிராம மக்களுக்கு சுய தொழில் பொருளாதார அபிவிருத்தி பற்றிய விழிப்புணர்வு இன்று புதன்கிழமை மிச் நகர் கிராமத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 'நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் சிலவேளை மனிதர்களை சோம்பேறிகளாக்கி விட்டிருக்கும் நிலைமையை நாம் காண்கின்றோம். கிணற்றில் நீர் எடுப்பதிலிருந்து கறிக்கு மரக்கறி வெட்டுவது வரையில் எல்லாவற்றுக்கும் மின்சார உபகரணங்களையே பயன்படுத்துகின்றோம். இதனால், பொருளாதார இழப்புக்கள் ஏற்படுவது ஒரு புறமிருக்க, இன்னொரு புறத்தில் ஈடுசெய்ய முடியாத மனித ஆரோக்கியம் கெட்டு விடுகின்றது. அதன் காரணமாக எம்மில் பலர் நோயாளிகளாக மாறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
100 மனித உழைப்பாளிகள் செய்த நெல் அறுவடை போன்ற விவசாய வேலைகளை இப்பொழுது அரை மணி அல்லது ஒரு மணி நேரத்தில் ஒரு இயந்திரம் செய்து விடுகின்றது. இப்பொழுது இயற்கையை அதன் தூய்மையான இயற்கைத் தன்மையுடன் அனுபவிக்க முடிவதில்லை, நிலமும் நீரும் காற்றும் மாசுபடுத்தப்பட்டுள்ளதால் எம்மில் சிறுவர் தொடக்கம் வயோதிபர் வரை அனைவரும் நோயாளியாகிக் கொண்டிருக்கின்றோம்.
இரசாயன நஞ்சு கலந்த விவசாய உற்பத்தி உணவுப் பொருட்களை அதிக பணம் கொடுத்து வாங்கி அவற்றை மின்சார இயந்திரங்களால் சமைத்து உட்கொண்டு விட்டு; நோயாளியாகிய பின்னர் நோயைத் தீர்ப்பதற்கு அதிக பணம் செலவழிக்கின்றோம். அந்த நாட்களில் வாழ்ந்த எம் மூதாதையர்கள் மருந்தாகவே உணவை உட்கொண்டார்கள். அவர்களது உணவுத் தெரிவு புத்திசாலித்தனமாக இருந்தது. நாம் இரசாயன நஞ்சு கலந்த உணவை வேறாக வாங்கி உட்கொண்டு விட்டு மருந்தை வேறாக வாங்கி சுகம் பெற முயற்சிக்கின்றோம். இந்தப் போக்கு மாறவேண்டுமானால் நாம் பழையபடி உடல் உழைப்புக்கும் நஞ்சு கலக்காத உற்பத்திக்கும் திரும்ப வேண்டும்' என்றார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .