2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'பல்கலைக்கழக உபவேந்தர் பொறுப்பு என்பது சவால் நிறைந்தது'

Thipaan   / 2016 ஜனவரி 24 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பல்கலைக்கழக உபவேந்தர் பதவி என்பது, பொறுப்புக் கூறவேண்டியதும் சவால் நிறைந்ததுமாகும் என கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய உபவேந்தர் தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கடமைப் பொறுப்புக்களை ஏற்கும் முகமாக அவருக்கு அளிக்கப்பட்ட பிரமாண்டமான வரவேற்பு நிகழ்வில்  அவர் உரையாற்றினார்.

கிழக்குப் பல்கலைக் கழக பொறுப்பு வாய்ந்த அதிகாரி உமா குமாரசுவாமி தலைமையில் வந்தாறுமூலை கிழக்கப் பல்கலைக் கழக பிரதான மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர் மேலும் கூறியதாவது,

கிழக்குப் பல்கலைக் கழகம் இலங்கையிலுள்ள மற்றெந்தப் பல்கலைக்கழகத்துக்கும் சளைத்ததாக இல்லை. இதனை ஒரு சர்வதேசப் புகழ்வாய்ந்த கல்வி நிலையமாக  மாற்றும் எமது நீண்டகாலக் கனவை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

இன மத பேதமின்றி இந்த நாட்டிலுள்ள சகல பிரஜைகளும் உயர்ந்த, சிறந்த கல்வி மட்டத்தை அடைய இந்தப் பல்கலைக் கழகம் வாய்ப்பளிக்கும்.

நாம் அனைவரும் பிரிந்து நிற்காது ஒற்றுமையே பலம் என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இயங்கினால் எதனையும் சாதித்து விடலாம் என்ற இலக்கை அடைவது சிரமமான ஒன்றாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை.

பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்குண்டிருந்த கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தைச் சீரமைத்து கடந்த எட்டு மாத காலத்தில் சிறப்பான நிருவாகத்தை எம்மிடம் விட்டுச் செல்கின்ற தகுதி வாய்ந்த அதிகாரியாகப் பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் உமா குமாரசுவாமியை கிழக்குப் பல்கலைக் கழக சமூகம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறும்.

இந்த சிறப்பான நிருவாகத்தை ஒரு தொடக்கப்புள்ளியாக வைத்து கிழக்குப் பல்கலைக் கழகத்தை முடிந்தவரை முன்னேற்றுவதற்கு நான் முயற்சி செய்வேன்.

அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.

அதேவேளை, எனது பதவிக் காலத்தை பெருமையடிப்பதற்கோ பிடிக்காதவர்களைப்; பழிவாங்குவதற்கோ நான் ஒரு போதும் பயன்படுத்தப் போவதில்லை.

இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பதிலளிக்க நான் கடமைப் பட்டவன். இது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்' என்றார்.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் கல்வி சாரா அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X