2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வடக்கிலேயே அதிகளவான காடழிப்புக்கள் நடைபெறுகின்றன

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

'இலங்கையில் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான காடழிப்புக்கள் நடைபெறுகின்றன. தற்போதைய கால கட்டத்தில் இது ஆரோக்கியமான விடயம் அல்ல' என மட்டக்களப்பு மாவட்ட வனபரிபாலன உத்தியோகத்தர் ஐனாப் நவீஸ் தெரிவித்தார்.

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு, வெல்லாவெளி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்று, பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் போரதிவுப்பற்று கலாசார மண்டப்பத்தில் திங்ட்கிழமை (06) நடைபெற்றது.  இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'இலங்கையில் 1900ஆம் ஆண்டு 84 சதவீதமான காடுகள் காணப்பட்டன. அது 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் 44 சதவீதமாக குறைவடைந்தது. பின்னர் 2002ஆம் ஆண்டு 22 சதவீதமாக குறைவடைந்து, இன்று அது 18 சவீதமாக குறைவடைந்துள்ளது.

வடக்கு, கிழக்கில் அதிமான காடுகள் காணப்படுகின்றன. இது ஆரோக்கியமானதொன்றாகும். இருந்தும்  இன்று வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான காடழிப்புக்கள் நடைபெறுகின்றன. தற்போதைய கால கட்டத்தில் இது ஆரோக்கியமான விடயம் அல்ல' என்றார்.

'உலகில் இன்று போதைவஸ்து கடத்தலுக்கு அடுத்ததாக வன ஜீவராசிகளே கடத்தப்படுகின்றன. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 360 யானைத்தந்தங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்பட்டன. அதனை ஆலயங்களில் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், இந்த அரசாங்கம் யானைத்தந்தங்களை ஆலயங்களில் காட்சிப்படுத்துவதன் ஊடாக இவ்வாறான பொருட்களில் மக்கள் ஆசை கொண்டு, மீண்டும் கடத்தலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாகிவிடும் என தவிர்த்துக் கொண்டது.
இது போன்ற நல்ல காரியங்களால் வன ஜீவராசிகளின் சட்டவிரோத கடத்தல்களை தடுப்பதற்கு முடிகின்றது. ஆனாலும் உலகில் இன்று மருத்துவத் தேவைகளுக்காக 20 பில்லியன் பெறுமதியான ஜீவராசிகள் அழிக்கப்படுவதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றது.   

இலங்கையைப் பொறுத்தளவில் பாரியளவில் வன ஜீவராசிகள் கடத்தல்கள் இடம்பெறாவிட்டாலும்கூட, முன்னர் பத்தாயிரம் யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டிருந்தது. தற்போதைய கணக்கீட்டின் படி அது ஐந்தாயிரமாக குறைந்துள்ளது. காடுகள் அழிக்கப்படுவதனாலேயே யானைகள் மக்களின் வாழ்விடங்களை நோக்கி வருகின்றன.

அந்தவகையில் வன ஜீவராசிகள்  அழிக்கப்படுவதை குறைப்பதற்காக பலதரப்பட்ட செயற்திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X