Suganthini Ratnam / 2016 ஜூன் 05 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'மட்டக்களப்பு, வாகரைப் பகுதியில் திட்டமிட்ட வகையில் பெரும்பான்மையின மக்களை குடியேற்றுவதற்கு சிலர் சதித்திட்டங்களை தீட்டுவதாகவும் அந்த சதி நடவடிக்கைகளுக்கு வாகரை பிரதேச செயலாளரோ மாவட்ட அரசாங்க அதிபரோ துணை போகுபவர்களாக இருந்தால் நாங்கள் வீதிக்கு இறங்கவேண்டிய நிலையேற்படும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நல்லாட்சி என்று கூறப்படுகின்றது. தற்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு செயற்பாடுகள் அரசாங்கத்தின் பின்னணியிலும் கூட்டு எதிர்க்கட்சிகளின் பின்னணியிலும் நடைபெற்றுவருகின்றன. .மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
திட்டமிட்ட வகையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 178 குடும்பங்கள் முன்பு இருந்ததாக கூறப்பட்டு அவர்களுக்கு காணிகள் வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநரினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அண்மையில் வாகரை பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபரை அழைத்து ஆளுநர் ஒன்றுகூடலை ஏற்படுத்தி வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் புனானை கிழக்கு பகுதியில் பெரும்பான்மையின மக்கள் முன்பு வாழ்ந்ததாகவும் அவர்கள் குடியேற்றப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால், அப்பகுதியில் 178 குடும்பங்கள் ஒருபோதும் இருக்கவில்லையென்பதை நான் உறுதியாக கூறவிரும்புகின்றேன். நான் இந்த பிரதேசத்திற்கு அருகிலேயே வசித்தவன் என்ற காரணத்தினால் வாகரை தொடர்பில் நீண்டகாலமாக அறிந்தவன் என்ற காரணத்தினால் இந்த குடும்பங்கள் அங்கு வசிக்கவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். ஆனால், புனானை பகுதியில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றன. அதற்குப் பதிலாக தற்போது பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 29 குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இது ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது. தற்போது இந்த நல்லாட்சியின் கீழ் இந்த 178 குடும்பங்கள் எவ்வாறு வந்தது? யுத்தத்திற்கு முன்னர் அங்கு 178 குடும்பங்கள் இருந்திருந்தால் அவர்கள் தொடர்பான பதிவுகள் இருந்திருக்கவேண்டும். 178 குடும்பங்கள் இருந்திருந்தால் அது ஒரு கிராமமாக இருந்திருக்கவேண்டும் அதற்கு ஒரு பெயர் இருந்திருக்கவேண்டும்.
எந்த பதிவுகளும் இல்லாத நிலையில் இன்று திடீரென காணி அனுமதிப்பத்திரங்கள் வந்திருக்கின்றன. அது எவ்வாறு சிங்களத்தில் வரமுடியும். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் எக்காலத்திலும் சிங்களத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.அவ்வாறான நிலையில் எவ்வாறு சிங்களத்தில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கமுடியும்.
இதன் பின்னணியில் யாரோ செயற்படுகின்றனர். திட்டமிட்ட வகையில் பழைய காலத்தை கூறி சதி முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். வாகரை பிரதேச செயலாளரோ மாவட்ட அரசாங்க அதிபரே அந்த நடவடிக்கைகளுக்கு துணைபோகுபவர்களாக இருந்தால் நாங்கள் வீதிக்கு இறங்கவேண்டிய நிலையேற்படும்' என்றார்.
21 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago