2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'விசேட அபிவிருத்திச் சட்டமூலம் திருத்தப்பட்ட பின்னர் அது தொடர்பில் கிழக்கு மாகாணசபை தீர்மானிக்கும்'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 25 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.ஹனீபா, பொன் ஆனந்தம், எம்.ஸ்.எம்.நூர்தீன்

விசேட அபிவிருத்தி தொடர்பான சட்டமூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திருத்தப்பட்ட பின்னர் அது தொடர்பில் கிழக்கு மாகாணசபை தீர்மானிக்கும் என அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை அமர்வு செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றபோது, விசேட அபிவிருத்தி தொடர்பான சட்டமூலம் மாகாணசபையில் வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்த நிலையில் அவர் உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,  'மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறித்தெடுக்கும் வகையில் முன்வைக்கப்படும் எந்தவொரு சட்டமூலத்துக்கும்; கிழக்கு மாகாண சபை ஆதரவளிக்கப் போவதில்லை என்பதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த சட்டமூலத்தை திருத்தத்துடன் முன்வைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் ஆராய்ந்து  தீர்மானம் எடுக்கப்படும்' என்றார்.  

'மேலும், மாகாணங்களின் அபிவிருத்திக்கு  பங்களிப்புச் செய்யும் மாகாண சபைகளையும் இணைத்துக்கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுக்க விசேட அபிவிருத்திச் சட்டமூலம் ஊடாக அரசாங்கம் தீர்மானித்தால், அதனை வரவேற்கத் தயார்.   

எவ்வாறாயினும், அரசியலமைப்புத் திருத்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான சட்டமூலத்தின் அவசியம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர்கள் கேள்வியெழுப்புகின்றார்கள்.

அரசியல் அமைப்புத் திருத்தத்தின் ஊடாக சகல இனங்களுக்குமான சுபீட்சமிக்க தீர்வை வழங்குவதன் மூலமாகவும் மாகாணசபைகளுக்கு நியாயமாக வழங்க வேண்டிய அதிகாரங்களை உறுதிப்படுத்துவதன் ஊடாக  மாகாணங்கள் தானாகவே அபிவிருத்தி அடையும்.

உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஊடாகத் தேர்தல் முறையில் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவ முறைக்கு  பாதகம் ஏற்படாத வகையில் வழிவகைகள் செய்யப்பட்டு அம்மக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்' என்றார்.

யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி, இந்த மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு கூடுதல் நிதியை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X