2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

'04 சதவீதமானோரின் குற்றங்களே நிரூபிக்கப்படுகின்றன'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 17 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


நான்கு சதவீதமானோரின் குற்றங்களே நிரூபிக்கப்படுகின்றன. ஏனைய 96 சதவீதமானோரின் குற்றங்களும் நிரூபிக்கப்படுவதில்லை என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அல் ஹாபிழ் என்.எம்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை (16) நடைபெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'நீதிமன்றங்களில் இன்று நான்கு சதவீதமானோரின் குற்றங்களே நிரூபிக்கப்படுகின்றன. ஏனைய 96 சதவீதமானோரின் குற்றங்களும் நிரூபிக்கப்படுவதில்லை.

நீதிமன்றங்களை பொறுத்தவரையில்; நியாயங்கள், உண்மைகளை வைத்து தீர்ப்புகள் வழங்குவதில்லை. சாட்சியங்களை வைத்தே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அனைவருக்கும் தீர்ப்பு நாளொன்றுள்ளது. அந்த தீர்ப்பு நாளில் நாங்கள் என்ன செய்திருந்தாலும், அதற்குரிய தீர்ப்பு நிச்சயம் கிடைத்தே தீரும்.

உலகில் இன்று பலர் கொல்லப்படுகின்றனர். ஈராக்கில் இரண்டு இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். நமது நாட்டிலும் கூட பலர் கொல்லப்பட்டுள்ளனர். கொலையாளிகள் இல்லாமலேயே வழக்குகள் முடிந்துள்ளன. இவற்றுக்கெல்லாம் நியாயம் அந்த தீர்ப்பு நாளில் கிடைக்கும் தீர்ப்பு நாள் ஒன்றுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விசேட தேவையுடையோர் உள்ளனர். இவர்களுக்கு எங்கே நியாயத்தை பெற்றுக்கொள்வது. அந்த தீர்ப்பு நாளில் எல்லோருக்கும் நீதி கிடைக்கும் என்பது உண்மை.

கொலை செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அந்த நியாயம் எங்கே கிடைக்குமென்றால் இறைவனுடைய அந்த தீர்ப்பு நாளில் நியாயம் கிடைக்கும்.

திருகோணமலையில் ஒரு கொலைச்சம்பவமொன்று இடம்பெற்றது. அதில் ஒருவரை கொலை செய்வதற்காக கொலையாளி திட்டமிட்டு அவர் சென்ற மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து கொலையாளியும் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கொலை செய்யப்பட்டவர் சென்ற மோட்டார் சைக்கிளில் இடையில் வைத்து இன்னுமொருவர் ஏறிச் செல்கின்றபோது இருவரையும் அந்த கொலையாளி சுட்டுக் கொலை செய்தார்.
அத்தோடு இந்தக் கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்துக்கொண்டு நின்ற பெண்ணொருவரையும் அந்தக் கொலையாளி சுட்டுக் கொலை செய்தார். மூன்று பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலையாளியின் இலக்கு மோட்டார் சைக்கிளில் முன்னிருந்து ஓடிச் சென்றவரே. ஆனால், பின்னாலிருந்து சென்றவரும் அந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டு நின்ற சாட்சியான அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட்டனர்.  இவர்கள் ஏன் கொலை செய்யப்படவேண்டும். இவர்கள் செய்த தவறு என்ன? இதற்குரிய நியாயம் எங்கே கிடைக்கும்?

நோன்பு என்பது பசித்திருப்பது, பட்டினி கிடப்பது மாத்திரமல்ல, பொய் பேசாமல், பாவங்களில் ஈடுபடாமல் இருப்பதுதான் உண்யைமான நோன்பாகும்.  எதை நாம் செய்தாலும், அதில் இறைவனின் திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்தே செய்ய வேண்டும்.

எதைச் செய்யும்போதும் இறையச்சம் இருக்க வேண்டும். பெயருக்கும் புகழுக்கும் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது. மனிதர்களுடைய திருப்தியை நாடி நாம் எதையும் செய்யக்கூடாது. இறைவனின் திருப்தியை மாத்திரம் எதிர் பார்த்தே காரியங்களை மேற்கொள்ள வேண்டும்' என்றார்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X