2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்கவும்: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கோரிக்கை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளை திட்டமிட்டவாறு அத்துமீறிபிடிப்பதை தடுத்து நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக கால்நடைப் பண்ணையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியதையடுத்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக கால்நடைகளை ஜீவனோபாய தொழிலாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் செய்துவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக ஒரு இலட்சத்து 50ஆயிரம் கால்நடைகளை வாகரை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள அரச காணிகளில் பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் மேய்ச்சல் தரையாக கால்நடைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இக்காணிகளை அரச வர்த்தமானியில் விளம்பரம் செய்து முடிப்பதற்கு பிரதேச செயலாளர்களின் ஊடாக மாகாண காணி ஆணையாளரின் அனுமதியுடன் கொழும்பிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த நிலையில் (1970ஆம் ஆண்டு தொடக்கம்) கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேய்ச்சல் தரைகளாக மிரண்டாவில், மியான்குளம், மயிலத்தமடு, மாதவளை, பலாவெட்டுவான்,  மந்திரியாறு போன்ற இடங்களைப் பாவித்து வருவதோடு இக் கிராமங்களில் அண்ணளவாக 40ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளை மேய்த்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் சில மாதங்களாக (30.7.2012 முன்) பதினைந்துக்கு மேற்பட்ட பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பெரியமாதவளை, சிறியமாதவளை பகுதிகளில் அத்துமீறி காணிகளைப் பிடித்து குடியிருப்புக்களை அமைத்து விவசாய செய்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்கள் அனைவரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தெய்யத்தகண்டி, மகாஒயா பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களென தெரியவருகிறது.

இது தொடர்பாக கிராம சேவையாளர் உரிய நடவடிக்கை எடுத்தும் இன்னும் அம்மக்கள் அவ்விடத்தை விட்டுச் செல்லவில்லை. அவர்கள் எவருடைய பின்புலத்தில் வந்துள்ளனர் என்பது உறுதிசெய்யப்படவில்லை. 

இவர்களினால் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இல்லாது நெருக்கடி எற்பட்டுள்ளது. இவர்களுக்கு மறைமுகமாக பாதுகாப்பு பிரிவினர் உதவ முன்வந்துள்ளனரா என்ற சந்தேகம் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஏற்படத் தொடங்கி உள்ளதோடு இதை உறுதிப்படுத்துமளவிற்கு அருகிலுள்ள மாவட்ட பாதுகாப்பு படையினர் செயல்படுகின்றனரா? என சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அரச அதிபர், பிரதேச செயலாளரிடம் முறையிட்டதைச் தொடர்ந்து அத்து மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்நெடுக்க பிரதேச செயலகம் ஆரம்பித்து கடந்த 10.9.2012இற்கு முன் அவ்விடத்தை விட்டு செல்லுமாறு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10.10.2012இதற்கு முன் கால்நடைகளை மேய்ச்சல் தரைகளுக்கு கொண்டு செல்லுமாறு பிரதேச செயலக உத்தியோககஸ்தர்கள், அரசாங்க அதிகாரிகள், விவசாகிகள் போன்றோர் கால் நடைப் பண்ணையாளர்களை வற்புறுத்திவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, விரைவாக இம்மேய்ச்சல் தரைகளை சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து விடுவித்துத் தருமாறு கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுக்கின்றனர். கடந்த வருடம் இப்பகுதியில் கால்நடைகளைப் பிடித்து அடைத்தும் கூரிய ஆயுதங்களால் தாக்கியும், பலமாடுகள் காணாமற் போயும் உள்ளதால் கால்நடை வளர்ப்போர் பல பிரச்சினைகளை எதிர்கொண்டதும்  குறிப்பிடத்தக்கதாகும்.

வாகரை, செங்கலடி, கிரான், வவுணதீவு, பட்டிப்பளை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைப் பகுதிகளில் குறிப்பிட்ட ஒரு சில வருடங்களாக பல நூற்றுக் கணக்கான பெரும்பான்மைச் சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் இப்பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்து வருவது குறிப்பிடத்தக்கதோடு அரசாங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இவைமட்டுமின்றி இப்பிரதேசத்திலுள்ள பாலவெட்டுவான் (மியான்குளம் மேற்பகுதி 400 ஏக்கர்) இப்பகுதியிலும் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியும் மேய்ச்சல் பகுதிக்கென  ஒதுக்கப்பட்ட தரையாகும். ஆகவே  கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதுதொடர்பாக 26-9-2012 அன்று அரசாங்க அதிபர் போன்றோருக்கு விபரமாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டு அதற்கு நடவடிக்கை எடுப்பதாக எனக்கு பதில் அனுப்பி உள்ளனர்

இருந்தும் கால்நடை பண்ணையாளர்கள் அங்கு கால்நடைகளை கொண்டு செல்வதற்கு அஞ்சுகின்றனர். எனவே உரியவர்கள் தலையிட்டு அத்துமீறி குடியேறியோர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .