2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

காத்தான்குடியில் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்றம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதேசத்தில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் தொடர்பில் மாற்றம் செய்யப்படவேண்டிய சில விடயங்கள்  சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் காத்தான்குடியிலுள்ள  பிரதான ஆறு ஜும்ஆ பள்ளிவாசல்களும் சேர்ந்து சில தீர்மானங்களை எடுத்துள்ளதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தீர்;மானங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மையவாடிகளை, அவற்றுக்குரிய ஜும்ஆ பள்ளிவாசல்கள் சுத்தப்படுத்தி தொடர்ந்து தூய்மையாக வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தல்.

ஜனாஸா அறிவித்தலை தேவைக்கதிகமாக நீட்டிக்கொண்டு செல்லாமல் எவர்களைக் கூறினால் அந்த ஜனாஸாவை அறிந்து கொள்ள முடியுமோ அவர்களது பெயர்கள் மாத்திரம் அறிவித்தலில் உள்ளடக்கப்படல் வேண்டும். இதற்கான ஒரு படிவத்தினைத் தயாரித்து அறிவிப்புச் செய்வதற்காக பள்ளிவாசல்களில் விநியோகித்தல்.

அறிவித்தலில் குறிப்பிடப்படும் நேரத்திற்கே ஜனாஸாத் தொழுகை நடத்தபட வேண்டும்.  ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டதும் அடக்குமிடத்தில் நிகழ்த்தப்படும் பயான் 10 நிமிடங்களைத் தாண்டக்கூடாது.   ஜனாஸாவைப் பார்வவையிடுவதை வீட்டில் மாத்திரம் வைத்துக்கொள்ள வேண்டும், குளிப்பாட்டி பள்ளிவாசலுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் ஜனாஸாவைப்  பள்ளிவாசலில் பார்வைக்காக வைக்கக்கூடாது. 

பார்ப்பதற்கு ஆகுமாக்கப்படாத (அஜ்னபியான) ஆண் ஜனாஸாவை பெண்கள் பார்ப்பதோ, அதேபோன்று பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்ப்பதோ முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

ஜனாஸா வீடுகளில் தேநீர் விநயோகம் செய்வது முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

ஜனாஸாவைப் பள்ளிவாசலில்; வைத்துக்கொண்டு உரை நிகழ்த்துவது தவிர்க்கப்பட வேண்டும். மிக முக்கிய பிரமுகர் என்று சம்மேளனமோ ஜம்இய்யதுல் உலமாவோ அல்லது குறிப்பிட்ட பள்ளிவாசலோ கருதுமிடத்து அந்த ஜனாஸாவின் சில நல்ல பண்புகள் பற்றி 10 நிமிடங்களுக்கு யாராவது ஒருவர் மாத்திரம்  உரை நிகழ்த்தலாம்.

ஜனாஸாக்களைப் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காகக் கொண்டுவரும் நேரத்தினைத் தீர்மானிக்கின்றபோது, அந்நேரம் ஐந்து வக்துத் தொழுகைக்கான நேரமாக இருப்பின் அதிகமான மக்களின் பங்குபற்றுதலும், துஆவும் அந்த ஜனாஸாவுக்கு கிடைக்கும் என்பதனை கருத்திற்கொள்ளவும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .