2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்களைத் தீர்க்க ஐந்து வருட திட்டம்: பி.எம்.சார்ள்ஸ்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்களை எப்படி தீர்த்துவைப்பது என்பது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஐந்து வருட திட்டம் ஒன்று வடிவமைக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மாவட்ட விவசாய திணைக்களமும் இணைந்து சின்ன வெங்காய செய்கையின் அறுடை விழாவை களுவாஞ்சிகுடியில் நடத்தியது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஊடாக மாவட்ட விவசாய திணைக்களம் முன்னோடித்திட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டுவந்த சின்னவெங்காய செய்கையே இவ்வாறு அறுவடைசெய்யப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனையின் கீழ் இறக்குமதிக்காக செலவழிக்கும் பணத்தை மீதப்படுத்தி அதன் மூலம் மக்களின் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைவாக நிறுத்தப்படும் இறக்குமதிக்கு பதிலீடாக மாவட்டங்கள் தோறும் அடையாளங்காணப்பட்ட பயிர்களை பயிரிடும் பணிகளின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முதன்முறையாக இந்த சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டது.

இதன் அறுவடை விழா களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட மகிழுரில் இடம்பெற்றது.

பிரதேச விவசாய உத்தியோகத்தர் நிவேதிதா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் ஹரிகரன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சுதாகரன், மட்டக்களப்பு தெற்கு விவசாய வலய உதவிப்பணிப்பாளர் பரமேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி விவசாய பணிப்பாளர் இக்பால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விவசாயிகளினால் உற்பத்திசெய்யப்பட்ட சின்னவெங்காயத்தின் அறுடையினை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்துவைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 கண்டத்தில் 180 கிலோ விதைகொண்டு ஆரம்பித்துவைக்கப்பட்ட சின்னவெங்காயச் செய்கையானது சுமார் 2000 கிலோ அறுவடையை தந்துள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஹரிகரன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .