2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மேய்ச்சல் காணிகளில் நடைபெறும் அத்துமீறிய நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில், மேய்ச்சல் தரைக்கு  ஒதுக்கப்பட்ட காணிகளை அத்து மீறி பிடிப்பதை  தடை செய்யுமாறும் அதற்குரிய அடையாளம் காணகப்பட்ட காணிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம், மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துமீறிய விவசாயத்தைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகொள் விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினரான துரைரெட்ணம் முதலமைச்சருக்கு இன்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, செங்கலடி, கிரான், வவுணதீவு, பட்டிப்பளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் கால்நடைகளுக்கென மேய்ச்சல் தரைகளை  விவசாயத்திணைக்களம், கால்நடைகளுக்கான மிருகவைத்திய திணைக்களம் ஆகிய திணைக்களத்தின் அனுமதியுடன் பிரதேச செயலாளர்கள்  கால்நடைப் பண்ணையாளர்களுக்கு மேய்ச்சல் தரைக்கான காணியின் அனுமதியை பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள் ஊடாகவும், நேரடியாகவும் கால்நடை திணைக்களத்திற்கும், கால்நடை பண்ணையாளர்களுக்கும் வழங்கியுள்ளனர்.  

இதை பிரதேச,மாவட்ட காணிபயன்பாட்டுக் குழுவின் அனுமதியுடன்  கொழும்பு காணி அமைச்சிற்கு அனுமதிக்காக அனுப்பபட்டது. இவைகளுக்கமைய அமைச்சிலிருந்து பலகுழுக்கள் வந்து இக்காணிகளை பார்வையிட்டுசென்றனர்.

இதுதொடர்பாக காணி மீட்கை திணைக்களத்தில் இருந்து காணிஅமைச்சிற்கூடாக பிரதேச செயலாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் வர்தமானி அறிவித்தல் செய்யப்படவில்லை. இவ்வேலைகள்   சுமார்  ஒரு வருடகாலமாக  நடந்துவருகின்றன.

இதேவேளை மேய்ச்சல்தரைக்கென ஒதுக்கப்பட்ட இடங்களை அத்து மீறிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர் குறிப்பாக,

(1) வாகரை பிரதேச செயலாளர் பிரிவில்  புணாணை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஆலங்குளப் பகுதியில் உள்ள வெள்ளாமச்சேனை, மாங்கேணி தெற்குகிராம சேவையாளர் பிரிவில் காரமுனை பகுதிகளாகும்.

(2) கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் குடும்பி மலை கிராம சேவையாளர் பகுதியில் உள்ள பெரிய மாதவனை, சிறியமாதவனை.
  
(3) செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மங்களகம கிராம சேவைபிரிவு புல்லுமலை, கோப்பாவெளி பின்பகுதி, உறுகாமம் பகுதிகளில் எல்லை பகுதிகள்.

(4) வவுணதீவு பிரதேசசெயலாளர்பிரிவில் உன்னிச்சை கிராமசேவையாளர்பகுதி வெட்டிப்போட்டசேனை பகுதியில் அத்துமீறி காணி பிடித்த சிலரை 2012௧1௨ திகதி அன்று நீதி மன்ற தீர்ப்பின் ஊடாக வெளியேற வேண்டுமென உத்தரவு வழங்கப்பட்டது.

(5) பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள கச்சைக் கொடி கிராம சேவையாளர் பிரிவில் கெவிழியாமடுவில் ஒருபகுதி, பொன்னாங்கண்ணிச்சேனையில் ஒருபகுதி, புளுக்குனாவை எல்லையில்  ஒருபகுதி, திவுலானையில் ஒருபகுதி.

இக்காணிகளை அத்துமீறிபிடித்தவர்கள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த  தெய்அத்த  கண்டி மகாஒயா பிரதேச செயலாளர்பிரிவைச் சேர்ந்தவர்களும் ஏனையவர்களும் என தெரியவருகிறது. இது தொடர்பாக கிராமசேவையாளர் உரிய நடவடிக்கை எடுத்தும் இன்னும் அம்மக்கள் அவ்விடத்தை விட்டுச் செல்லவில்லை.   

இவர்களினால் 20 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட  கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை   இல்லாது நெருக்கடி எற்ப்பட்டுள்ளது. அம்பாரைமாவட்டத்தின் சிலபகுதிக்குரியதும், வெல்லாவெளிபிரதேசத்துக்குரிய கால்நடைகளும் இப்பகுதியைத்தான் மேய்ச்சல் தரையாக பயன்படுத்துகின்றன.

ஷஇப்பகுதியில் காணிபிடிக்கும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு  மறைமுகமாக பாதுகாப்பு பிரிவினர் உதவ முன்வந்துள்ளனரா? என்ற சந்தேகம் கால் நடைப்பண்ணையாளர்களுக்கு ஏற்படத்தொடங்கி உள்ளதோடு இதை உறுதிப்படுத்துமளவிற்கு அருகிலுள்ள மாவட்ட பாதுகாப்புபடையினர் செயல்படுகின்றனரா? என கேள்வியும் எழுந்துள்ளது.
 
கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்டஇடங்களிலில் அத்துமீறி விவசாயச்செய்கையில் ஈடுபட்டவர்களினால் பலகால்நடைகள் கட்டப்பட்டும் கால்நடைகளுக்கு தீங்கும்  விளைவிக்கப்பட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மேய்ச்சல்தரையை இழப்பது மட்டுமின்றி கால் நடைகளையும் இழக்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

எனவே இப்பிரதேசசெயலாளர்பிரிவுகளில் கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரைகளில் அத்து மீறி விவசாயம் செய்வதையும் கால்நடைகளுக்கு தீங்கு ஏற்படுத்துவதையும் தடுத்து நிறுத்துவதோடு மேய்ச்சல்தரைக்கு ஒதுக்கப்பட்ட காணியை வர்தமானி மூலம் அறிவித்தல் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X