2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடாக் கிளையின் மகஜர்

A.P.Mathan   / 2013 ஜனவரி 18 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸரீபா

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடாக் கிளை ஏற்பாடு செய்திருந்த கண்டணப் பேரணியின் இறுதியில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் ஆகியோரிடம்; அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடாக் கிளை பிரதிநிதிகளால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு விலாசமிடப்பட்டு ஒப்படைப்பதற்காக மகஜர் கையளிக்கப்பட்டது. அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன...

18.01.2013

அரசாங்க அதிபர்,
கச்சேரி,
மட்டக்களப்பு.

ஊடாக,

பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
கோறளைப்பற்று மேற்கு,
ஓட்டமாவடி.



கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தற்காலிகமாக பிரிக்கப்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளையும் அதனோடு நிரந்தரமாக இணைக்கக் கோருதல்.

மேற்படி விடயம் தொடர்பில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற மக்கள் அவர்களது பிரதேச செயலகப் பிரிவு தொடர்பிலான கோரிக்கைகளை மேற்படி எமது அமைப்பின் ஊடாக உரிய நடவடிக்கைக்காக தங்கள் முன் சமர்ப்பிக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் மொத்தம் 2633.1 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டது. இங்கு காணப்படும் 14 பிரதேச செயலகப் பிரிவுக்கும் இதனை சரியாக பிரித்தால் கூட ஒரு செயலக பிரிவுக்கு 188.08 சதுர கிலோ மீற்றர் காணி இருத்தல் வேண்டும். ஆனால் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு இருந்த நிலம் 176.6 சதுர கிலோ மீற்றர் மாத்திரமே.

இந்நிலையில் இச்செயலகப் பிரிவிலிருந்து 158.0 சதுர கிலோ மீற்றர் நிலப் பரப்பைக் கொண்ட 05 கிராம சேவகர் பிரிவுகள் இந்த மக்களின் எந்தவித அங்கீகாரமுமின்றி கிரான் செயலக பிரிவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டதனால் வெறுமனே 18.6 சதுர கிலோ மீற்றர் நிலப் பரப்பினுள் பலத்த நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இதிலும், வயல் சார்ந்த பிரதேசங்களை தவிர்த்து நோக்கினால் மக்களின் குடியிருப்பு காணிகள் வெறும் 4.0 சதுர கிலோ மீற்றர் மாத்திரமே. இதேநேரம் இந்த 05 கிராம சேவகர் பிரிவுகளையும் கிரான் செயலகப் பிரிவுடன் இணைக்காவிட்டாலும் அச்செயலகப் பிரிவுக்குத் தேவையான போதிய நிலப்பரப்பு அச்செயலகத்துக்கு இருக்கின்றது.  இதன் மொத்த நிலப்பரப்பு 510.0 சதுர கிலோ மீற்றர் ஆகும்.

இந்த 05 கிராம சேவகர் பிரிவுகளையும் கிரான் செயலகப் பிரிவுடன் இணைக்கும் போது அது 668.0 சதுர கிலோ மீற்றர் நிலப் பரப்பைக் கொண்டிருக்கின்றது. இங்கு 8000 குடும்பங்களைக் கொண்ட சுமார் 33000 பேர் 4.0 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் வாழ கிரான் பிரதேச செயலகப் பிரிவில் 8593 குடும்பங்களைச் சேர்ந்த 32000 பேர் 668.0 சதுர கிலோமீற்றர் நிலப் பரப்பில் வாழ்ந்து வருகின்றனர். இது பெரும் அநியாயமாகும்.
இந்த 05 கிராம சேவகர் பிரிவுகளும் தற்போது கோறளைப்பற்று மேற்கு நிருவாக எல்லைக்குள் இயங்கி வருகின்ற நிலையில் அது வேறொரு பிரதேச செயலகப் பிரிவுக்குள் உள்ளடங்குவது எந்த வகையிலும் நியாயமாகாது. இதே நேரம் இப்பிரதேசத்தின் பிரதேச செயலகத்திற்கும் அதே பிரதேசத்தின் பிரதேச சபைக்கும் இரு வேறு எல்லைகள் இருப்பது இலங்கையில் இங்கு மட்டும் இருக்கின்ற ஒரு எல்லை நிர்ணயமாகும்.

வெறும் 4.0 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினுள் 33000இற்கும் மேற்பட்ட மக்கள் நெருங்கி வாழ்வதால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதுடன் பல அசௌகரியங்களையும் எதிர்நோக்குகின்றனர். அத்துடன் இங்குள்ள குடிநீர்க் கிணறுகளில் 90 வீதமான கிணறுகள் மலசலகூட குழிகளை அண்மித்திருப்பதன் காரணமாக அவைகளை குடிநீருக்கு பயன்படுத்துவது பொருத்தமற்றதாக அமைந்திருப்பது அண்மைய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்காலிகமாக கிரான் செயலகப் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ள 05 கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள பெரும்பான்மையான காணிகள் இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சொந்தமானதாக இருக்கின்றது. இப்பிரதேச மக்கள் தங்களின் நிருவாக விடயங்களையும், விவசாயத் தேவைகளையும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளவே விரும்புகின்றனர்.

எனவே எமது பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளையும் கோறளைப்பற்று மேற்கு பிரதே செயலகப் பிரிவுடன் இணைத்து இம்மக்கள் எதிர்நோக்குகின்ற அசௌகரியங்களை நிவர்த்திப்பதற்கு உதவுவதோடு மக்கள் இலகுவான முறையில் நிருவாகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் ஆவன செய்யுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.    

செயலாளர்,
கல்குடா உலமா சபை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .