2026 மே 07, வியாழக்கிழமை

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தேவையற்று குரல்கொடுக்கின்றனர்: முரளிதரன்

Kogilavani   / 2013 ஏப்ரல் 06 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகள் குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்காத தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தற்போதுமட்டும் தமது அரசியல் நோக்கங்களுக்காக தேவையற்ற குரல்களை எழுப்பிவருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நாங்கள் யுத்த சூழ்நிலையின்போது இருந்த நிலைமையினையும் தற்போது இருக்கும் நிலைமையினையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்;. யுத்த கால சண்டைகள் குறித்து சந்தோசப்பட்ட நாம்; அதன் துன்பங்கள் தொடர்பில் சிந்திப்பதில்லை.

யுத்தத்தின் தாக்கங்கள் தொடர்பில்; சிந்தித்து பார்க்கவேண்டும். இன்று எமது குழந்தைகள் பல்வேறு வழிகளிலும் சாதனைபடைத்து வருகின்றனர். சுதந்திரமாக திரிந்துவருகின்றனர். இதனை நாங்கள் கடந்த காலத்தில் மேற்கொள்ளமுடியவில்லை. ஆனால் அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.

வடக்கினை பொறுத்தவரையில் மீள்குடியேற்றம் முற்றாக பூர்த்தியடைந்துள்ளது. தற்போது ஒருவர்கூட முகாமில் இல்லை. அந்த மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவேண்டும்.

வடகிழக்கில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் மக்களின் உயர்வுக்கு எதனையும் செய்யாத தமிழ் நாட்டு தலைவர்கள் இன்று தங்களது அரசியல் நோக்கங்களுக்காக தேவையற்ற விடயங்களுக்கு குரல்கொடுத்துவருகின்றனர். தேவையான விடயங்களுக்கு குரல்கொடுப்பதில் தவறில்லை.ஆனால் தேவையற்ற விடயங்களுக்கு குரல்கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

இந்தவேளையில் புலம்பெயர் மக்களுக்கும் ஒன்றை கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். புலம்பெயர் மக்கள் ஒன்றுபட்டு இங்குள்ள தமிழ் உறவுகளின் வளர்ச்சிக்கு உதவ முன்வரவேண்டும். தேவையற்ற விடயங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொண்டு  எமது மக்களுக்கு தேவையானவற்றை மட்டும் செய்ய முன்வரவேண்டும்.

இன்று தமிழர்களின் இருப்பு, கல்வி மற்றும் பொருளாதாரத்திலேயே தங்கியுள்ளது. இந்த இரண்டையும் நாங்கள் வளர்த்தால் எமது சமூகத்தின் இருப்பை யாராலும் அசைக்கமுடியாது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .