2026 மே 04, திங்கட்கிழமை

போதைவஸ்து பாவனை மட்டு. மாவட்டத்தில் அதிகரிப்பு: யோகேஸ்வரன் எம்.பி

Super User   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைவஸ்;து பாவனை அதிகரித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

போதைவஸ்து பாவனைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில்  பாரிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் உயர் தர மாணவர்களுக்கான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்து உயைராற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 85,000 மது போத்தல்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு போதைவஸ்த்து பாவனை அதிகரித்து செல்வதால் போதைவஸ்து பாவனையிலிருந்து நமது சமூகத்தையும் இளைஞர்களையும் மாணவ சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும்.

இதற்காக போதைவஸ்துக்கு எதிராக பாரிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டும். இன்று பாடசாலைகளிலும்; சமூக சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் சமூகச் சீரழிவில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பிலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கலடியில் இடம்பெற்ற இரட்டை கொலையுடன் பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். அம்மாணவர்களில் கொலை செய்யப்பட்டவர்களின் மகளும் அடங்களாக நான்கு மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். கலாசார சீரழிவு இன்று எவ்வளவு தூரம் நமது மாணவர்களை இட்டுச் சென்றுள்ளது.

இந்த மாணவர்கள் தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள் இவர்களில் இரண்டு பேர் சிறந்த பெறுபேறுகளை பெறக் கூடிய மாணவர்கள் என அறிகின்றோம். இன்று அந்த மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து போயுள்ளது. அவர்கள் சமுதாயத்திலிருந்து தூரப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்து மதம் கொலை, கொள்ளை போன்ற பாவங்களை மிக கடுமையாக எதிர்க்கின்றது.  இவ்வாறான பாவங்களை இந்து மதம் நிராகரிக்கின்றது. இவ்வாறான பாவச் செயல்களில் ஒரு போதும் யாரும் ஈடுபடக்கூடாது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனையில் வைத்து ஒரு சில பாடசாலை மாணவர்கள் போதைவஸ்து பாவித்துள்ளனர். இவர்களை பொலிஸார் கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர்.

மாணவர் சமூகம் சிறந்த ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்து மதத்தின் மீதான பற்றையும் ஆன்மிக விருத்தியையும் பெற்றுக்கொள்ள முடியும். பாடசாலைகளில் சிறந்த  நல்லொழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கவும் அவர்களுக்கான சிறந்த வழிகாட்டலை மேற்கொள்வதற்காகவும் நாம் இந்து இளைஞர் பேரவையூடாக  இவ்வாறான தலைமைத்துவ பயிற்சி நெறியை நடாத்துகின்றோம்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எழில்வாணி பதம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .