2026 மே 07, வியாழக்கிழமை

'புத்தர் சிலை அமைக்கும் முயற்சி சமாதானத்தை சீர்குலைக்கும் செயல்'

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'மட்டக்களப்பு மாநகரத்தின் நுழைவாயிலில் புத்தர் சிலை அமைக்க மேற்கொள்ளும் முயற்சியானது தற்போது நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிரந்தர சமாதானத்தை கேள்விக்குறியாக்கிவிடும்' என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு மாநகரத்தின் நுழைவாயிலில் புத்தர் சிலை ஒன்றினை நிரந்தரமாக அமைப்பதற்கு கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் முயற்சித்தபோது அதனை தடுத்து நிறுத்துமாறு அப்பகுதி பொது அமைப்புக்களும் பொதுமக்களும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாரம்பரியமாக தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் மட்டக்களப்பு நகரத்தின் நுழைவாயிலில் திட்டமிட்ட அடிப்படையில் புத்தர் சிலையை அமைத்து தமிழர்களின் உணர்வுகளை உரசிப்பார்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியானது நாட்டில் நீண்ட கொடிய 30 வருட யுத்தத்தின் பின்னர் அமைதியாக வாழ்ந்து வரும் மக்களின் நிரந்தர சமாதானத்தினையும் அமைதியையும் குழப்புவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நடவடிக்கையாகும்.

இவ்வாறான வேண்டப்படாத செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் மக்கள் காட்டும் எதிர்ப்பானது சிங்கள, தமிழ் மக்களிடையே தற்போது வளர்ந்து வரும் நல்லுறவை சீர்குலைத்து விடுவதோடு தமிழர்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுவதற்கான சந்தர்ப்பத்தையே தோற்றுவிக்கும்.

மட்டக்களப்பு மாநகரத்தில் சிங்கள மக்கள் நிரந்தரமாக வசிக்காது தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்ற போதிலும் பௌத்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜயந்திபுரம், மட்டக்களப்பு நகரம் போன்ற பகுதிகளில் காணப்படும் பௌத்த விகாரைகளுக்கு என்றும் எதிர்ப்பு தெரிவித்தது கிடையாது.

எனவே அமைதியாக வாழ்ந்து வரும் மக்களிடையே இவ்வாறான விரும்பத்தகாத செயற்பாடுகளை பலவந்தமாக திணித்து தமிழ் சிங்கள மக்களிடையே வீனான பகைமையை ஏற்படுத்தி அமைதியான முறையில் சமாதானமாக வாழ்ந்து வரும் மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதை உடன் நிறுத்தவேண்டும்' எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .