2026 மே 07, வியாழக்கிழமை

கதிர்காம முருகன் ஆலய சர்ச்சைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்: யோகேஸ்வரன் எம்.பி

Kogilavani   / 2013 ஜூன் 12 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல்-சக்திவேல்

'கதிர்காமம், முருகன்; ஆலய கொடியேற்றம் மற்றும் தீர்த்த உற்சவ திகதிகள் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்' என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கதிர்காம கந்தன்; ஆலய வருடாந்த உற்சவம் ஆடி மாதத்திலிருந்து ஆவணி மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளமைக்கு தனது

அதிர்ப்பதியை வெளியிட்டுள்ள அவர் இந்த முடிவினை மீள்பரிசீலனை செய்யுமாறு பிரதமரும், மதவிவகார அமைச்சருமான தி.மு.ஜயரட்ணவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த பல ஆண்டுகளாக இந்துக்களையும் பௌத்தர்களையும்; வழிபாட்டு ரீதியாக ஒன்றுபடுத்தும் வகையில் கதிர்காமம் கந்தனின் வருடாந்த உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்று வந்துள்ளன.

குறிப்பாக கதிர்காமம் முருகன் ஆலய ஆடிமாத கொடியேற்றத்தை முன்னிட்டும், உற்சவ தினத்தை முன்னிட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட அடியார்கள் பாதயாத்திரை செல்வது வழமை.

அத்தோடு ஆடிமாத பூரணை தினத்தில் உற்சவம் நடைபெறுவதால் தீர்த்தத்திலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.

இவ்வாலய கொடியேற்றம் மற்றும் தீர்த்த உற்சவத்தினை அடிப்படையாக கொண்டு வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாகாணங்களிலுள்ள முருகன் ஆலயங்களில் வருடாந்த உற்சவங்கள் நடாத்தப்படுவது வழமையாகும்.

இந்து கலாசார திணைக்களம் வெளியிட்ட இவ்வருட பஞ்சாங்கத்தை நம்பியும் பல வருங்டங்களாக நடைபெற்று வந்த கதிர்காம உற்சவ ஆரம்ப தினத்தை நம்பியும் வடபகுதி செல்வ சந்நிதி ஆலயத்தில் இருந்து நூற்றுக் கணக்கான அடியார்கள் கடந்த 25 நாட்களுக்கு மேலாக பாதயாத்திரை மேற்கொண்டு தற்போது திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி கிராமத்தை அடைந்துள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் யூலை 8ஆம் திகதி கதிர்காம கொடியேற்றத்தை அடையும் வகையிலே புறப்பட்டுள்ளனர். இந்த பாதயாத்திரைக்காக இவர்களுக்கு 55 நாட்கள் தேவைபடுகிறது. தற்போது 26 நாட்கள் சென்றுள்ளன.

ஆனால், கதிர்காம உற்சவ கொடியேற்றத்தை ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு மாற்றியமைத்ததால் இவர்கள் ஒரு மாத காலத்தை எவ்வாறு எங்கு கழிப்பது என்பதில் திண்டாடுகின்றனர்.

இதேவேளை கதிர்காம ஆலயத்தை ஒட்டி ஆரம்பமாகும் அனைத்து இந்து ஆலய உற்சவங்களையும் நடத்துவதிலும் அவ் ஆலய நிர்வாகத்தினர் சிக்கலுக்குள்ளவார்கள்;. பாத யாத்திரைக்காக அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறைகளை
பெற்றுள்ளனர். இதனால் இவர்களின் நிலையும் தற்போது பாதக நிலையை அடைந்துள்ளது.

எனவே, தயவுசெய்து வழமையான முறையில் கதிர்காம உற்சவ ஆரம்ப தினத்தை ஆடி மாதம் நடாத்த முன்வருமாறு வேண்டுகின்றேன்.

பாதயாத்திரை மேற்கொள்ளும் அடியார்கள் அனைவருக்கும் தாங்களால் அதிகரிக்கப்பட்ட ஒரு மாதகாலத்துக்கான அனைத்து பராமரிப்பு ஒழுங்குகளையும் சம்பளமற்ற விடுமுறைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு இவ் விடுமுறை நாட்களை சம்பளத்துடனான விடுமுறையாக மாற்றவும் உடன் நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன்' என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரதிகளை ஊவா மாகாண சபை முதலமைச்சர், கதிர்காமம் முருகன் ஆலய பொறுப்பாளர், இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .