2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'காணி,பொலிஸ் அதிகாரங்களை வைத்து கூட்டமைப்பு என்ன செய்யபோகிறது?'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

'மாகாண சபையின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்யப் போகின்றார்கள்? இதுவரைக்கும் மக்களை ஏமாற்றிப் பிழைத்தது போல்தான் இந்த அதிகாரங்கள் கிடைத்ததும் மக்களை மேலும் ஏமாற்றிப் பிழைப்பார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை' என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதியின் அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கான காரியாலயத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

'1949 இந்திய பாகிஸ்தான் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.  இவ் ஒப்பந்தத்தினால் இலங்கையில் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தார்கள்.

1950-1951 காலப்பகுதியில் இலங்கை நாட்டில் பரவலாக பல்லின மக்களும் குடியேற்றப்பட்டார்கள். இதில் மட்டக்களப்பு மாவட்டம் அம்பாறை, மட்டக்களப்பு என இரண்டாகத் துண்டாடப்பட்டன.

1956 ஆம் ஆண்டு சிங்கள மொழிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 1965 இல் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனால் மீண்டும் மலையக மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

1972 இல் தரப்படுத்தல் நடைபெற்றது. இதில் மட்டும்தான் யாழ்.மாவட்டம் பாதிக்கப் பட்டிருந்தது. இவற்றுள் வவுனியா, மன்னார், போன்ற மாவட்டங்கள் பாதிப்படையவில்லை.

இவைகளனைத்தையும் வைத்துப் பார்க்கின்ற போது 1949 இல் இருந்து 1972 வரைக்கும் பல்வேறுபட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

1949 இல் ஆயுதம் ஏந்தாதவர்கள் 1972 இல் ஆயுதம் ஏந்தினார்கள். சரியான தலைமைத்துவம் கொண்டவர்கள் என்றால் ஆரம்பத்திலேயே ஆயுதம் எந்தியிருக்க வேண்டும் அல்லவா?

இது இவ்வாறு இருந்தாலும் 1987 இல் வடகிழக்கு இணைந்திருந்தது. அப்போது காணி பொலிஸ் அதிகாரங்களை கேட்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது வடகிழக்கு பிரிந்தவுடன் தமக்கு காணி பொலிஸ் அதிகாரங்களைக் கேட்டு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

ஏற்கனவே கிழக்கில் 48 வீதமிருந்த தமிழ் மக்கள் 1987 காலப் பகுதியில் கிழக்கில் 44 வீதமானார்கள்.

ஆனால் தற்போது அறிக்கைளில் 39 வீதமுள்ளதாக கணிப்பீடுகள் சுட்டிக் காட்டுகின்றன. இருந்தாலும் கிழக்கில் தற்போது 34 வீதம்தான் தமிழ் மக்கள் உள்ளார்கள்.

திருகோணமலை மாவட்டத்தினை எடுத்துக் கொண்டால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பகுதியும், ஈச்சிலம் பற்று பிரதேசமும்தான் தமிழ் பிரதேசங்காகவுள்ளன. அந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த குச்சவெளி, மொறவௌ, போன்ற பிரதேசங்களில் தற்போது வேறுயாரோ வாழ்கின்றார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு, திருக்கோவில், காரைதீவு, நாவிதன்வெளி, போன்ற பிரதேசங்களில்தான் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள் பொத்துவில் கல்முனை, போன்ற தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகளில் தற்போது அப்பகுதியில் வேறுமக்கள் செறிந்து வாழ்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் மட்டக்களப்பில்தால் அதிகம் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள். கிழக்கு என்றால் உடன் ஞாபகத்திற்கு வருவதும் மட்டக்களப்புத்தான் இதனை மறுப்பதற்கு யாருமில்லை.

இந்த நிலையில் வடக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை அமுல் படுத்துவது பற்றி பேசவேண்டுமாக இருந்தல் விக்கினேஸ்வரனிடம்தான் பேசவேண்டும். கிழக்கிற்கு விக்கினேஸ்வரனிடம் பேசவேண்டிய அவசியமில்லை. கிழக்கிற்கு கிழக்கு முதலமைச்சர் அப்துல் மஜீதிடம்தான் பேசவேண்டும்.

இதனை விடுத்து தற்போதைய வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தணித்தால் அது அவர்கள் காணும் ஒரு பகல் கனவாகத்தான் இருக்க முடியும். 

1972 இல் மக்கள் அழியும்போது சிந்திக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது காணியும் பொலிசும் தேவை என்று கூறுவது மிகவும் நகைப்புக்குரியது. இதனை மக்கள் மிகவும் ஆழமாக அறிந்த கொள்ளவேண்டும்' எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • 2222 Wednesday, 09 October 2013 07:08 AM

    இதை பற்றி பேசும் தகுதி உமக்கு இல்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X