2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆரையம்பதியில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்றுவேன்: அருண் தம்பிமுத்து

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார், தேவ அச்சுதன்


'மட்டக்களப்பு - ஆரையம்பதி பிதேசத்தைச் சேர்ந்த இந்து மயான மற்றும் அரச காணிகளில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களை ஜனாதிபதியுடன் பேசி வெளியேற்றுவேன்' என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

'ஆரையம்பதி இந்து மயான காணி மற்றும் அரச காணிகளை காத்தான்குடியைச் சேர்ந்த சிலர் அத்துமீறி பிடித்துள்ளதுடன் சுற்றுவேலி அமைத்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு தனியார் காணி இருந்தமைக்கான எந்த அறிகுறியும் இல்லை. மயானக் காணியினையும் அரச காணியினையுமே அவர்கள் பிடித்துள்ளமை தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இப்பிரச்சினையினை ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு சென்று அத்துமீறியவர்களை வெளியேற்றி மயானக் காணியினை மீட்டுத்தருவதுடன் அரச காணிகளை பொதுத் தேவைகளுக்கும் பயன்படுத்த ஏற்பாடு செய்வேன்' என ஆரையம்பதி மக்களிடம் அருண் தம்பிமுத்து உறுதியளித்துள்ளார்.

ஆரையம்பதி இந்து மயானக் காணியில் ஒரு பகுதியினையும் அப்பகுதியில் உள்ள அரச காணிகளையும் காத்தான்குடியைச் சேர்ந்த பலர் அத்து மீறிப்பிடித்து வேலி அமைத்துள்ளதை அடுத்து மயானக் காணியினை மீட்டுத்தருமாறும் ஆரையம்பதிப் பிரதேசத்தில் உள்ள அரச காணிகளை அத்துமீறி பிடிப்பதை தடுக்குமாறும் கோரி  மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இடம்பெற இருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக நுழைவாயிலைப் பூட்டி ஆரையம்பதி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மாவட்ட செயலகத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.  இந்நிலையில் குறித்த மயானம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சென்று அருண் தம்பிமுத்து மற்றும் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன், வவுணதீவுப் பிரதேச அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அருண் தம்பிமுத்து, 'இங்கு நான் வருவதற்கு முன்பு நில அளவை வரைபடத்தை பார்த்து விட்டே வந்தேன். அதற்கும் அப்பால் இங்கு தனியார் காணி இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை மயானத்துக்குரிய காணியும் அரச காணியுமே அத்துமீறிப் பிடிக்கப்பட்டுள்ளது. மயானத்தைக் கூட வேலியிட்டு அடைத்துள்ளனர்.
 
அது மாத்திரமன்றி இங்குள்ள இந்து ஆலயத்தை மாத்திரம் ஒரு பக்கத்தால் விட்டு ஏனைய அனைத்துப் பகுதியினையும் வேலியிட்டு அடைத்துள்ளனர். இப்பகுதி தங்களுக்குரியதாயின் இந்து ஆலயம் அமைப்பதற்கு காணி எங்கிருந்தது. இந்த ஆலயத்தை அமைக்கும் வரைக்கும் இக்காணிக்குரியர்கள் பார்த்துக் கொண்டு எங்கிருந்தார்கள். இது ஒரு திட்டமிட்ட செயல் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஒரு குடியேற்றத் திட்டத்திற்கு காணி பிரிப்பது போன்று பிரித்துப் பிரித்து அடைக்கப்பட்டுள்ளது' என்றார்.

'ஆரையம்பதிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் காத்தான்குடி நிருவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை அனுமதிக்கவும் முடியாது. நான் சாதாரணமாக நினைத்துக்கொண்டே வந்தேன். ஆனால் இங்கு நிலைமை விபரீதமாக உள்ளது. எவ்வாறு ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து வந்து இன்னொரு பிரதேச செயலாளர் பிரிவில் அத்துமீறிய செயற்பாட்டில் ஈடுபடுவது.

நான் இது விடயமாக ஜனாதிபதியுடன் கதைத்து அத்துமீறி காணியினை அடைத்துள்ளவர்களை வெளியேற்றுவதுடன் இந்து மயானத்துக்குரிய காணியினையும் மீட்டுத்தருவேன். தேவைப்படின் இப்பிரச்சினைக்கு தீர்வு காண காணி ஆணையாளர், அரசாங்க அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய விசேட குழு ஒன்றினையும் ஜனாதிபதி ஊடாக அமைத்து நடவடிக்கை எடுப்பேன்' என்று அவர் மேலும் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .