
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்
பொதுநலவாய மாநாட்டுத் தலைவர்கள், மட்டக்களப்புக்கு வருகை தராதது பெரும் கவலையளிக்கின்றது என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.
இன்று (15.11.2013) மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா, மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுகின்ற ஓர் அமைப்பாகும்.
பொதுநலவாய மாநாட்டுக்கு வருகை தரும் பொதுநலவாய மாநாட்டு தலைவர்கள் மட்டக்களப்புக்கு 13ஆம் திகதி வருகை தரவுள்ளார்கள் எனவும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு எமது சிவில் சமூக அமைப்புக்கு வேண்டுகோள்விடப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் இதற்கான இணைப்பாளர் எழுத்து மூலம் எமக்கு அறிவித்திருந்தார்.
அந்தவகையில் மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ள அந்த தலைவர்களை வரவேற்பதற்காக நாம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் இங்குள்ள அதிகாரிகள், விமானப்படை அதிகாரி ஆகியோருடன் இணைந்து ஏற்பாடுகளை மேற் கொண்டோம்.
தலைவர்கள் தங்குவதற்கான ஹோட்டல் வசதி, அவர்களுக்கான மட்டக்களப்பின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் அவர்களை வரவேற்பதற்கான கலாசார நிகழ்வுகள், அவர்கள் சுற்றுலா சென்று மட்டக்களப்பை பார்வையிடுதவற்கான ஏற்பாடுகள் என விரிவான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டன.
ஆனால் கடந்த 12ஆம் திகதி மாலை அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தரமாட்டார்கள் எனும் செய்தியை கேள்வியுற்று கவலையடைந்தோம்.
இளவு காத்த கிளிபோல எமக்கு நடந்தது. மட்டக்களப்புக்கு பொதுநலவாய மாநாட்டுத்தலைவர்கள் வராமல் விட்டது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் வேதனைப்படுகின்றனர்.
மாவட்ட மக்களுக்கு இது மிகுந்த வேதனையை தருகின்றது. மட்டக்களப்பு என்பது யுத்தம் மற்றும் சுனாமி உட்பட இயற்கை அனர்த்தங்களினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும்.
இங்கு வந்து இந்த மக்களின் குறைகள் நிறைகளை கேட்டு அவர்களுக்கு உதவுவார்கள் என நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் அது ஏமாற்றத்தில் முடிவடைந்தது.
இது எமக்கு பெரும் வேதனையை தருவதுடன் கவலையளிக்கின்றது என ஆயர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராசா, எமது ஆயர் கூறியது போல எமது மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு இவர்களை வரவேற்க விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.
மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் விமானப்படை அதிகாரி, கடற்படை அதிகாரிகள் என அனைவருடைய ஒத்துழைப்புடன் நாங்கள் விரிவான ஏற்பாடுகளை மேற் கொண்டிருந்தோம். ஆனால் இவர்கள் வருகை தரமால் விட்டது கவலையளிக்கின்றது.
பொது நலவாய மாநாட்டுத் தலைவர்களில் ஐந்து நாட்டுத் தலைவர்கள் மாத்திரமே மட்டக்களப்புக்கு வருகை தரவிரும்பியதாகவும் ஏனையோர் வடக்குக்கு போகவே விரும்பியதாகவும் அதனாலேயே மட்டக்களப்பு விஜயம் ரத்துச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.