2025 மே 02, வெள்ளிக்கிழமை

வெளிநாடுகளில் எம்மை அடகு வைத்தே அரசாங்கம் கடன் பெற்றுள்ளது: கோவிந்தம் கருணாகரம்

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

இலங்கையிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தற்போது மூன்றரை இலட்சம் ரூபா கடன் பட்டுள்ளோம். நாங்கள் தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெறுவதுபோல் எங்கள் ஒவ்வாருவரையும் இந்த அரசாங்கம் வெளிநாடுகளில் அடகு வைத்து கடன் பெற்றுள்ளது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்.செட்டிபாளையம் பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் விவாதப் போட்டியும் பரிசளிப்பு விழாவிலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வு மட்.செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் விபுலானந்த மண்டபத்தில நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அவர் புத்தகங்கள் கையளித்து விட்டு உரையாற்றுகையில், 

அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் இன்று அபிவிருத்தி பற்றிக் கதைக்கின்றார்கள். அபிவிருத்தி என்பது என்ன? அபிவிருத்தி என்பது வீதிகள் போடுவதோ கட்டிடங்கள் கட்டுவதோ அல்ல வறுமைக்கோட்டின் கீழுள்ள மனிதனை உயர் நிலைப் படுத்துவதுதான் அபிவிருத்தியாகும்.

அந்த நிலை இன்றைய நிலையில் காணப்படவில்லை அபிவிருத்தி என்ற போர்வையில் அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள்கூட 10 வீதம் தரகு பணத்தை வாங்கிக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

இதனைவிட ஆசிய அபிவிருத்தி வங்கி, நெக்டப், ஜெய்க்கா, போன்ற அமைப்புக்கள் சுனாமியாலும், யுத்தத்தினாலும் பாதிக்கப் பட்டுள்ள எமது பிரதேசங்களைக் கட்டியெழுப்பவதற்கு வழங்கப்படுகின்ற நிதியில் அரசுடன் இருக்கின்ற தமிழ் அரசியல் வாதிகள் கற்களை நாட்டுவதும் நாடாவை வெட்டுவதுமாகவும், கட்டிடங்களைத் திறந்து வைப்பதும்தான் அபிவிருத்தி என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் கட்டப்பட்டு திறக்கப்படும் கட்டட திறப்பு விழாக்களில் அரசுடன் ஒட்டியிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பார்த்து நையாண்டி கதைகளைக் கதைக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று கேட்கின்றார்கள்.

 அபிவிருத்தி என்ற போர்வையில் நாங்கள் மக்களின் பணத்தினைச் கூறையாடவில்லை தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்கின்றோம்.அதனை அரசாங்கத்டன் இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளால் கேட்க முடியுமா?

பொலநறுவையில் கடந்த காலங்களில் 16 சிவன்கோயில்களும் 4 விஷ்னு கோயில்களும் இருந்தன ஆனால் தற்போது ஒரே ஒரு சிவன்கோயில் மாத்திர மேயுள்ளது. தம்புள்ளையிலிருந்து கோயில் அடித்து ஒழிக்கப் பட்டுள்ளது, 56 வருடங்களாக அலரிமாளிகைக்குப் பின்னாலிருந்த அம்மன் கோயில் இடமாற்றப் பட்டுள்ளது. இதனை யார் தட்டிக் கேட்கின்றார்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமிழ் மக்களுடன் தோளோடு தோள்நின்று உழைக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புதம்தான் தட்டிக்கேட்டு வருகின்றது. இதனை அவர்களால் கேட்கமுடியாது.

தங்களது சொந்த நிதியில் அல்லது அரசாங்கத்தின் பணத்தில் ஏதாவது அபிவிருத்திகளையாவது அவர்கள் மேற்கொண்டால் நாங்க்ள அவர்களுக்கு தலை வணங்குவோம். இலங்கையிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தற்போது மூன்றரை இலட்சம் ரூபா கடன்பட்டுள்ளோம். நாங்கள் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெறுவதுபோல் எங்கள் ஒவ்வாருவரையும் இந்த அரசாங்கம் வெளிநாடுகளில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளது.அங்கு பெற்ற பணத்தினைக் கொண்டு வந்து அதில் 10 வீதத்தினை அவர்கள் எடுத்து விட்டு மீதிப்பணத்தினை அபிவிருத்தி செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு பூச்சாண்டி காட்டுகின்றார்கள். 

எனவே, குடும்பம், கிராமம், பிரதேசம், மாவட்டம், மாகாணம் என ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணம் சேர்ந்து இயங்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழன் தமிழனான வாழவேண்டும். இந்த நாட்டில் தமிழன் இரண்டாம் தரப்பிரஜை இல்லை என்பதனை நாங்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும். அதற்கு தமிழர்கள் அனைவரும் தமிழர்களாக ஒற்றுiமையுடன் வாழவேண்டும். என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .