2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொருட்களின் விலை அதிகரிப்பை தடுக்க முடியாது: ஹிஸ்புல்லா

Menaka Mookandi   / 2013 நவம்பர் 20 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'பொருட்களின் விலையை அரசாங்கத்தினால் குறைக்க முடியாது. உலக சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பதாலேயே இலங்கையிலும் பொருட்களின் விலை அதிகரிக்கின்றது' என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விதவைகள் மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு சுய தொழில் உபகரணங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை (18) உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டு மேலும் தெரிவித்ததாவது,

'இந்த நாட்டை எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும் பொருட்களின் விலை குறையாது. உலக சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பதுதான் நமது நாட்டிலும் பொருட்களின் விலை அதிகரிப்புக்கான காரணமாகும்.

இந்த நிலையில் ஒவ்வொரு குடும்பங்களும் தமது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதற்காகவே எமது பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டு வாழ்வெழுச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தின் ஊடாக வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் சுய தொழில் நடவடிக்கைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு மானியமாக வழங்கப்படும் இந்த உதவிகளை சரியாக பயன்படுத்தப்படல் வேண்டும். உரிய நோக்கத்திற்காக பயன்படுத்துவதுடன் இதை விற்பணை செய்யக் கூடாது.

சிலர் இலவசமாக வழங்கப்படுகின்ற வாழ்வாதார தொழில் உபகரணங்களை கடைகளுக்கு சென்று விற்பனை செய்து விடுகின்றார்கள். அவ்வாறு செய்யக் கூடாது. இந்த வாழ்வாதார உபகரணங்களை வைத்து உங்களது தொழில் முயற்சிகளை மேற் கொண்டு நாளொன்றுக்கு 200 ரூபாவாவது வருமானத்தை ஈட்ட வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், காத்தான்குடி பிரததேச செயலக உதவி திட்டமிடல் இணைப்பாளர் கே.கருணாகரன், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி உட்பட அதிகாரிகள், சிறுவர் மகளிர் விவகார உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியேகாத்தர்கள் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .