2025 மே 03, சனிக்கிழமை

வீடு கொள்ளை; இராணுவ வீரர் கைது

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வீடு ஒன்று கொள்ளையிடப்பட்டது தொடர்பில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஒரு தொகை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் முன்னர் மட்டக்களப்பு சிங்கள மகாவித்தியாலயத்தில் உள்ள 12ஆவது கஜபாகு படை பிரிவில் கடமையாற்றி பின்னர் அநுராதபுரம், எப்பலாவெளி இராணுவ முகாமில் கடமையாற்றிவரும் இராணுவ வீரர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வெய்லி வீதியில் உள்ள சிங்கள மகாவித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள வீட்டின் குளியலறை ஜன்னல் ஊடாக புகுந்த கொள்ளையர் வீட்டில் இருந்த இரண்டு பவுண் காப்பு, ஒன்றரை பவுண் தோடு, மோதிரங்கள் மூன்று, 90ஆயிரம் ரூபா பெறுமதியான ஐபாட், சின்ன மாலை, கையடக்க தொலைபேசி, 48ஆயிரம் ரூபா பணம் உட்பட ஐந்து இலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிட்டிருந்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பில் மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய இராணுவ வீரர் தொடர்பில் சந்தேகம் கொண்ட குற்றப் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அநுராதபுரத்தில் உள்ள எப்பலாவெளி பகுதிக்கு மாற்றலாகிச்சென்ற நிலையில் இதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவர் தம்புள்ள பகுதியில் கொள்ளையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்தது மற்றும் அடகு வைத்தது தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

இதனைத்தொடர்ந்து தம்புள்ள, சீகிரியா பகுதியில் வைத்து குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரினால் விற்கப்பட்ட மற்றும் அடகுவைக்கப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர் ஏற்கனவே தம்புள்ள, கெக்கிராவை பகுதியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் உட்பட இரு சம்பவங்கள் தொடர்பில் வழக்குகள் நடைபெற்றுவருவதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X