2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நெல்சன் மண்டேலாவை விடுதலை வீரர் என்று உலகம் கூறுகின்றது: பொன்.செல்வராசா

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

தென்னாபிரிக்காவில் கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை இந்த உலகம் பயங்கரவாதி என்று கூறியதில்லை. விடுதலை வீரர் என்றே கூறுகின்றது. அதுபோலவே, எமது மக்களின் விடுதலைக்காக போராடிய எமது இளைஞர்களும் பயங்கரவாதிகள் அல்ல. விடுதலை வீரர்கள் என்றே உச்சரிக்கப்படவேண்டியவர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, தாண்டவன்வெளி ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எமது மாவட்டத்தின் கல்வி நிலை பற்றி நாம் சிந்திக்கின்றபோது, கல்வியில் சற்று பின்னடைந்துள்ளதை காணலாம். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக  இடம்பெற்ற யுத்தத்தினால் கல்வியை மட்டுமல்லாது,  வாழ்வாதாரம், சொத்து, உயிர்கள் என்று அனைத்தையும்  எமது தமிழ்ச் சமூகம் இழந்துள்ளது.

2009ஆம் ஆண்டு இந்த யுத்தம் மௌனம் அடைந்தாலும், அதன் பின் எமது இளைஞர்கள் பயங்கரவாதிகளாக கருதப்பட்டனர். எமது இளைஞர்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடியவர்களை ஒருநாளும் பயங்கரவாதிகளாக கணிக்கமுடியாது.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த நெல்சன்மண்டேலா, அவரது மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். இறுதியில் பேச்சுவார்த்தை மூலம் அந்த நாட்டில் தமது இனத்தின் அரசியலை மேம்படுத்தி தமக்கென்றொரு அரசாங்கத்தை ஏற்படுத்திய பெருமை நெல்சன்மண்டேலாவை  சாரும். நெல்சன்மண்டேலாவை உலகத்தில் வாழும் எந்த சமூகத்தவரும் பயங்கரவாதி என்று சொல்லவில்லை. ஒரு விடுதலை வீரர் என்றே இந்த உலகம் கூறுகின்றது.

அதுபோலவே, இலங்கைத்தீவில் தமது இனத்துக்கு  உரிமை கிடைக்கவில்லை என்ற காரணத்தால் ஆயுதம் ஏந்திய இளைஞர்களை  பயங்கரவாதிகளாக கருதமுடியாது. அவர்களும் விடுதலை வீரர்கள் என்றே உச்சரிக்கப்படவேண்டியவர்கள்.

உண்மையான சமாதானம் இந்த நாட்டில் மலரவேண்டுமாயின்,  தமிழர்களின் அபிலாஷைகள்  தீர்க்கப்படவேண்டும். இவை தீர்க்கப்படவில்லை என்ற காரணத்தால்; இந்த நாடு பற்றி எரிந்தது. மாறி,மாறி வந்த அரசாங்கங்கள் தமிழர்களை ஏமாற்றிப் பிழைத்தார்களே தவிர, அவர்கள் எமது பிரச்சினைகளை தீர்க்க மறுத்துவிட்டார்கள்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X