Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து இருப்பதா, இல்லையா என்ற நிலைக்கு வந்துள்ளேன் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்த கருத்து தெரிவித்த அவர்,
'நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாணசபையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. புதிய முதலமைச்சரை தெரிவுசெய்கின்ற விடயத்தில் பல விதமான விமர்சனங்களும் கருத்துப்பரிமாறல்களும் நடந்;தன.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அண்ணளவாக முஸ்லிம்களும் தமிழ் மக்களும் சரிசமமாக அல்லது சற்று முஸ்லிம்கள் கூடுதலாக இருக்கின்ற நிலையில், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்; முதலமைச்சராக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது. அந்த அடிப்படையில் முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற விடயம் முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்ற அறிக்கைகள், கருத்துக்கள் அனைத்தும் முஸ்லிம்களை வெகுவாக பாதித்துள்ளன. தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்திவிடும் என்றளவுக்கு கருத்துக்களும் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. இன்னுமொரு சமூகத்தின் உரிமைகளை தட்டிப் பறித்துக்கொள்ளாமல், முஸ்லிம் சமூகத்துக்கான உரிமைகளை சரிசமமாக பெற்றுக்கொள்வதில் முஸ்லிம் சமூகம் கவனமாக இருக்கின்றது.
இந்த அடிப்படையில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பந்தமாக எழுந்த அந்த பிரச்சினையின்போது, தற்போது முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஹாபீஸ் நஸீர் அஹமட் என்னை தொடர்புகொண்டு தனக்கு 18 உறுப்பினர்கள் சத்தியக்கடதாசியை வழங்கியுள்ளார்கள்.
நீங்களும் உங்களுடைய சம்மதத்தை தரவேண்டும் என்று கேட்டபோது, ஏற்கனவே முஸ்லிம்கள் அதிக உறுப்பினர்களாக இருக்கும் கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருந்தவன் என்ற வகையில் நான் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி உடனே எனது சம்மதத்தை தெரிவித்து சத்தியக்கடதாசியை வழங்கினேன்.
நான் சம்மதம் தெரிவித்து சத்தியக்கடதாசியை கொடுத்து அரை மணி நேரத்தின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் என்னுடன் தொடர்புகொண்டு நான் சம்மதம் தெரிவித்து வழங்கிய சத்தியக்கடதாசியை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார்.
வாபஸ் பெறுவதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்றிருந்தேன். ஆனால், எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் உடனடியாக வழங்கிய சத்தியக்கடதாசியை வாபஸ் பெறவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், நான் அந்த கடிதத்தை வாபஸ் பெறவில்லை. மீண்டும் என்னை தொடர்புகொண்ட அமைச்சர் ரிசாட் பதியுதீன், என்னை கொழும்பு வருமாறு அழைத்தார். நான் கொழும்பு சென்று பிரதியமைச்சர் அமீர்; அலியினுடைய அலுவலகத்தில் நான் மற்றும் அமைச்சர் ரிசாட் மற்றும் பிரதியமைச்சர் அமீர் அலி ஆகிய மூவருமாக இருந்து இது தொடர்பாக பேச ஆரம்பித்தபோது உடனடியாக கிழக்கு மாகாண ஆளுநருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த சம்மதக்கடிதத்தை வாபஸ் பெறச் செய்ய வேண்டும் என்று கூறி அழுத்தம் கொடுத்தனர்.
நான் அந்தக் கடிதத்தை வாபஸ் பெறுவதில்லை என்ற விடயத்தில் உறுதியாக இருந்தேன். அதன் பின்னரும் வாபஸ் பெறும் கடிதமொன்றினை தந்து அதில் வாபஸ் பெறவேண்டும் என்ற அழுத்தத்தையும் கொடுத்தார்கள். அதற்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து நான் வெளியேறினேன்.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை எவ்வாறாவது கவிழ்க்க வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்புடனேயே அவர்கள் எனக்கு அழுத்தங்களை கொடுத்தார்கள். முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில் முஸ்லிம் சமூகத்திற்கு அநியாயம் விளைவிக்கும் இவ்வாறான நடவடிக்கைக்கு நான் ஒருபோதும் துணை போகக்கூடாது என்ற விடயத்தில் நான் கவனமாக இருந்தேன்.
ஆட்சி மாற்றத்தின்போது அமைக்கப்படும் கிழக்கு மாகாணசபையில் எனக்கு ஒரு அமைச்சுப்பதவியினை பெற்றுத்தருவதாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறியிருந்தார்கள். அதை எல்லோரிடமும் உறுதிமொழியளித்திருந்தார். அவ்வாறான ஒரு அமைச்சுப்பதவி கிடைக்கும் என்று தெரிந்தும் கூட அது என்னுடைய சுயநலத்திற்காக இந்த முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமையை நான் விட்டு விடக்கூடாது என்ற துணிகரத்தில் நான் இருந்தேன்.
நான் எனது கட்சியின் தலைமைத்துவத்திடம் கேட்டு சம்மதக் கடிதத்தை வழங்கியிருக்கவேண்டும் என்ற குற்றத்தினை தவிர என் மீது வேறு எந்தப்பழிச் சொல்லும் சொல்லமுடியாது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஒரு அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியினை வழங்க நாங்களும் ஆயத்தமாக இருந்தோம். ஐந்து முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகொண்டேன். முதலமைச்சரை எடுப்பதற்கு அழுத்தங்களை கொடுத்தோம் என்று கூறியிருந்தார்.
அமைச்சர் ரிசாட் கூறியது உண்மையாக இருக்குமானால் நான் செய்ததும் அவர் நினைத்ததும் ஒன்றுதான் என நான் நினைக்கின்றேன். அமைச்சர் ரிசாட் பதியுதீன் முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியினை வழங்க வேண்டும் என்று நினைத்ததை நான் செய்துள்ளேன்.
பின்னர் அதை வாபஸ் பெறச் சொன்னதன் பின்னர் இந்த கட்சி மீதும் தலைமையின் மீதும் பாரிய சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையிலேயே அவர்களுடன் அதிகம் முறன்பட வேண்டிய நிலை எற்பட்டது. இதற்காக என்னை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கவுள்ளதாக சமூக ஊடகங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. நான் சமூக நோக்கோடு செய்த இந்த விடயத்தினை சரி கண்டு கொள்ள முடியாத தங்களுடைய சுயலாபங்களை மாத்திரம் பார்க்கின்ற இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பயணிப்பதா இல்லையா என்ற கேள்வி எனக்குள் ஏற்பட்டுள்ளது.
அகில மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்ற நிலைக்கு வந்துள்ளேன். அத்தோடு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாமல் நின்ற முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விடயத்தில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை அவரை கட்சியிலிருந்து நிறுத்தவுமில்லை. முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் சேர்ந்து அரசியல் செய்வதில்லை என்ற உறதியான முடிவுடன் இருக்கின்றேன்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இது போன்ற விடயங்களை வேறு ஒரு வடிவத்தில் காய்; நகர்த்துகின்றனர் என்ற சந்தேகமும் எனக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த காய் நகர்த்தல்களுக்கு நான் பாவிக்கப்படுகின்றேன் என்ற உண்மையும் எனக்கு விளங்குகின்றது. இவ்வாறு சமூகத்தினை தந்திரமாக ஏமாற்றிச் செல்லும் விடயங்களுக்கு நான் உடன்பட்டு போகமுடியாது என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னை தெரிவுசெய்த மக்களின் அபிப்பிராயங்களை பெறவேண்டும். அத்தோடு சமூகம் சார்ந்த அரசியலை செய்வதாக இருந்தால் மக்களுடன் சேர்ந்த அரசியலாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கொள்வது பற்றி இன்னும் சில தினங்களில் நான் முடிவுவெடுப்பேன். ஆனால் கட்சி விட்டு கட்சி மாறி தொடர்ந்தும் அரசியல் செய்யும் நோக்கம் எனக்கில்லை. எனினும் நான் செல்லும் இறுதியான கட்சியாக அது இருக்கும் இல்லையென்றால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்' என்றார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago