Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
'கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சு பதவியை தற்போது தங்களது கைகளில் எடுத்துள்ளார்கள். ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில வேலைத்திட்டங்களை செய்யவேண்டியுள்ளது. இதன் காரணமாக நாங்களும் இந்த கிழக்கு மாகாணசபையில் இணைந்து ஆட்சி அதிகாரத்தை செய்யவேண்டிய நிலையிலுள்ளோம்;' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (16) மாலை விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கடந்தகாலத்தில் கிழக்கு மாகாணசபையில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார்கள். பாடசாலை சிற்றூழியர் நியமனங்களில் கூட, தமிழ் இளைஞர்கள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டு வேறு இனம் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தமை நாம் அனைவரும் அறிந்த உண்மை.
குறிப்பாக, படுவான்கரை பகுதியிலிருக்கும் பாடசாலைகளுக்கு, அம்பாறையிலிருக்கும் (சம்மாந்துறை, நிந்தவூர்) முஸ்லிம் இளைஞர்களுக்கு நியமனங்களை வழங்கி வேலைக்கு அமர்த்திய கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றமை தமிழ் மக்களுடைய இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இவ்வாறான நிலைமைகளை தொடர்ந்து அனுமதிக்கமுடியாது. இதனை தடுக்கவேண்டிய தார்மீகக் கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய 11 ஆசனங்களை பெற்றவர்கள் நாங்கள். அந்த வகையில் முதலமைச்சர் பதவியை பெறவேண்டியவர்களும் நாங்களே. இருந்தபோதும், முஸ்லிங் காங்கிரஸ் 7 ஆசனங்களை பெற்று முதலமைச்சு பதவியை திட்டமிட்டு தன்வசப்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி நாங்கள் அவர்களுடன் இணைந்து, இரண்டு அமைச்சுகளையும்; ஒரு பிரதி தவிசாளர் பதவியையும் ஏற்பதற்கு இருக்கின்றோம். இதனை ஏற்பதானது நாங்கள் ஏதோ முஸ்லிம் காங்கிரஸுக்கு அடிபணிந்து பதவிகளை ஏற்பது என்று யாரும் தவறாக நினைக்கக்கூடாது.
கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டே இதனை பொறுப்பெடுக்கவுள்ளோம். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எதிர்காலத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கவுள்ளோம். அதனை தமிழ் மக்களும் கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும் என்ற மனோநிலையை ஏற்படுத்தவேண்டும்.
மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் உயிர் அச்சுறுத்தலுக்கும் மத்தியில், கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டி வளர்த்தவர்கள் நாங்கள். அனைத்து தமிழ் மக்களும் ஒற்றுமையாக இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த முன்வரவேண்டும் அப்போதே, எமது இலக்கை நோக்கி தொடர்ந்து செல்லமுடியும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .