2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிகிரியா விவகாரம்; மகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தாய் வேண்டுகோள்

Menaka Mookandi   / 2015 மார்ச் 12 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

சிகிரியாக் குன்றிலுள்ள கண்ணாடிச் சுவரில் தனது பெயரை உதயா எனப் பொறித்மைக்காக 2 வருட சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சித்தாண்டியைச் சேரந்த சின்னத்தம்பி உதயசிறியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அவரது தாயான தவமணி சின்னத்தம்பி வயது (61, ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை முன்வைத்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'தமிழ் மக்களாகிய நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தோம். இந்த நிலையில் எந்தக் குற்றமும் புரியாத எனது மகள் மட்டக்களப்பு மாணிக்கக் கற்கள் பட்டை தீட்டும் பயிற்சிக் கல்லூரியில் கடந்த 3 வருடங்களாக பயிற்சி பெற்று வருகின்றார்.

வார இறுதி நாட்கள் தவிர ஏனைய நாட்களில் காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு வந்து சேருவார். மிகவும் அடக்க ஒடுக்கத்தோடு கண்ணை இமை காப்பது போல் எனது பிள்ளையை அன்போடு வளர்த்து வந்தேன். மாணிக்கக் கற்கள் பட்டை தீட்டும் பயிற்சிக் கல்லூரியில் உள்ள பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து சிகிரியாவின் ஓவியங்களைப் பார்ப்பதற்காக ஒரே நாளில் சென்று திரும்புவதாகவும் பணம் ரூபாய் 350 மட்டுமே செலவாகும் என என்னிடம் அனுமதி கேட்டார். நான் அனுமதி கொடுக்காதவிடத்து அவர் தொடர்ந்து அடம்பிடித்ததிற்கு இணங்க நானும் பாதுகாப்பாக சென்று வருமாறு அனுமதியளித்தேன்.

எனது மகள் கூறிய 350 ரூபாய் போல் எத்தனை மடங்கு பணம் செலவு செய்தும் வாழும் வளரும் இன்ப சுகம் மற்றும் துன்பங்களை அறியாத எனது மகள், சிறையில் வாடுவதைப் பார்த்தால் எனது உயர் பிரிந்து விடும் போல் தோன்றுகின்றது. சில ஊடகங்களில் எனது மகள் காதலர் தினத்தன்று தனது அன்புக்குரிய காதலனின் பெயரை சுவரில் பொறித்ததாக செய்திகள் வெளியாகின. இது முற்றிலும் பொய்யான தகவல்.

மலையிலிருந்து இறங்கும் போது முன்பாக வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் சென்றதனால் அவர்களின் பின்னால் நிதானமாக மெதுவாக இறங்கும் போது நேரம் சென்று கொண்டிருக்கையில் மலையில் உள்ள கண்ணாடிச் சுவரில் பெயர்கள் எழுதப்பட்டிருந்த நிலையில் தனது தலை முடியில் உள்ள ஊசியை எடுத்து தனது பெயரின் முதல் உள்ள உதயா என்ற சொல்லை மட்டும் தான் அவர் பொறித்திருந்தார்.

அவர் பெயரை பொறித்து விட்டு நகர்ந்து வரும் போது இடையில் சிகிரியா பொலிஸார் வந்து உதயா யார் எனக் கேட்போது நான்தான் எனக் கூறியதும் பொலிஸார் உடனே அவளை கைது செய்து பெயரை எழுதிய குற்றத்திற்காக 5 இலட்சம் தண்டப் பணமும் மற்றும் 5 வருடங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனைக் கேட்ட எனது அன்பு மகள், தலையில் அடித்துக்கொண்டு அழுதபடி மலையிலிருந்து குதித்து தன்னை மாய்ப்பதற்கு முயற்சிக்கையில் அவரை அழைத்துச் சக நண்பர்கள், அவளை அரவணைத்து பொலிஸார் கூறுவதுபோல் ஒன்றும் நடக்காது என ஆறுதல் கூறினர். பின்னர், அவளைக் கைது செய்த பொலிஸார், பின்னர் அவளை தம்புள்ளை பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

நான் 1987.04.22ஆம் திகதியன்று வாழைச்சேனை காகித ஆலையில் கடமைபுரிந்த சின்னத்தம்பி என்பவரை திருமணம் செய்தேன். எனது மகள் உதயசிறி 3 மாத குழந்தையாக இருக்கும்போதும் மற்றும் எனது மூத்த மகள் 12 வயதாக இருக்கும் போதும் எனது கணவர் காலமானார். கணவனைப் பிரிந்த சோகத்தோடு எந்த உதவிகளும் இன்றி பிள்ளைகளின் நிலையை எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 5 பெண் பிள்ளைகளும் 1 ஆண்பிள்ளையுமாக 6 பிள்ளைகள் இருந்தனர்.

மிகுந்த சிரமத்தின் மத்தியில் தந்தையின் பராமரிப்பு இல்லாமல் தாய் அன்பை மட்டும் ஊட்டி மிகவும் கட்டப்பாட்டுடன் வளர்த்தேன். 3 பெண் பிள்ளைகள் திருமணம் முடித்துவிட்டனர். ஒரு கண் பார்வையை இழந்த நான், இவர்களை வளர்ப்பதற்காக உடம்பை சாறாய் பிழிந்து பல கஷ்டங்களை அனுபவித்தேன். நெல் குத்தியும், அவல் இடித்தும், அப்பம் சுட்டும், வீட்டில் மரக்கறி தோட்டம் போட்டு மரக்கறி விற்பனை செய்தும் சம்பாதித்த பணத்தைக் கொண்டு மிகவும் எழிமையாக எனது குடும்பத்தை வளர்த்தேன். அவர்களும் எனது சிரமத்தைப் பார்த்துக்கொண்டு எனக்கு எந்தவித் தொந்தரவும் கொடுக்காமல் வாழ்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில் தான் இந்த இடி என் தலையில் வந்து விழுந்தது. பிள்ளைகள் சமைக்கும் உணவைக் கூட நிம்மதியாக உண்ண முடியாமல் தினமும் ஏங்குகின்றேன். ஏன் இறைவன் என்னைச் சோதிக்கிறான் என நான் எனக்குள் நினைத்து அழும்போது எனது பிள்ளைகள் படும் துயரத்தை நினைந்து மனம் நொந்துவிடுகின்றேன். எனது இந்த பரிதாப நிலையை ஊடகங்கள் வாயிலாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி, அறியாமல் செய்த எனது மகளின் பிழையை மன்னித்து விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோளை விடுக்கின்றேன்' என்று கூறினார் அந்த தாய்.


You May Also Like

  Comments - 0

  • Ravi-Swiss Friday, 13 March 2015 06:14 AM

    சம்பந்தப் பட்டவர்கள் இவரின் மகளை விடுவித்து இந்த தாய்க்கு உதவி பண்ணவேண்டும் ==

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X