2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க.வின் காத்தான்குடி அமைப்பாளருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு

Menaka Mookandi   / 2015 மார்ச் 16 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் ஒருவர், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தோடு இணைந்து பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றஞ்சாட்டி, 8பேர் கையொப்பமிட்ட கடிதமொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கபீர் ஹாசீமுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எச்.எம்.எம்.முஸ்தபா என்பவர், கடந்த அரசாங்கத்தோடு இணைந்து பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டில், பொலன்னறுவ, சும்கம எனும் முகவரியில் வசிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் எம்.ஐ.முகம்மட் தம்பி என்பவரிடத்தில் அரச உத்தியோகம் இருப்பதாகவும் அதனை பெற்றுத்தருவதாகவும் கூறி காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலுள்ள தமிழ் - முஸ்லிம்கள் இளைஞர்கள் எட்டு பேரை ஏமாற்றி 2 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாவினை ரொக்கமாகப் பெற்றுக்கொண்டு வேலையையும் வழங்காமல் வாங்கிய பணத்தை மீளவும் வழங்காமல் எம்மை பல மாதங்களாக ஏமாற்றி வந்தார்.

இவரது ஏமாற்று நடவடிக்கையை அறிந்துகொண்ட நாங்கள், கடந்த 11.7.2013ஆம் திகதியன்று, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். அவரது அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி காத்தான்குடி மத்தியஸ்த சபைக்கு அந்த வழக்கு மாற்றிக்கொண்டார். அதனடிப்படையில் மத்தியஸ்த சபை, மேற்படி நபரை அழைத்து விசாரணை செய்து பணத்தை  மீள வழங்குமாறு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இதுவரை எமது பணம் மீள வழங்கப்படவில்லை. இது விடயமாக கடந்த 27.2.2015 அன்று அவரை நேரடியாக சந்தித்து எமது பணத்தினை மீள வழங்குமாறு கோரிய போது, 'நான் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன், இனிவரும் காலங்களில் அதிகளவான அரச வேலைகள் வழங்கப்பட இருப்பதால் அவற்றில் பொருத்தமான வேலைகளை பெற்றுத் தருவேன் என உறுதியளித்தார். அதன் பின்னர் மிகுதிப் பணத்தை வழங்குவதாகவும் கூறினார்.

நாங்கள் எங்கள் தகப்பன் காலத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு முஸ்தபா போன்ற மோசடிக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைப்பாளர் பதவியை தாங்கள் மறுபரீசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு தங்களது ஆட்சிக்காலத்தில் ஊழல் மோசடிகளுக்கு பல்வேறு விசாரணைகள் செய்து வருவதை எம்மால் அறியமுடிகின்றது.

அதனடிப்படையில் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள மோசடிகளை விசாரணை செய்து, தங்களது கட்சி அமைப்பாளிடமிருந்து எமது பணத்தினை பெற்றுத்தருவதோடு எதுவித தொழிலும் இன்றி மிகவும் கஸ்டத்தில் வாழும் எமக்கு முடியுமான அரச தொழிலை பெற்றுத்தருவதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்' என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்துடன், பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரதி மற்றும் காத்தான்குடி மத்தியஸ்த சபையினால் வழங்கப்பட்ட கடிதங்களின் பிரதிகளும் அனுப்பபட்டுள்ளன.

இக்கடிதத்தின் பிரதிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கரமசிங்க மற்றும் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே, மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கே.மோகன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X