2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வாய்க்கால் உடைப்பெடுத்ததால் வயல் நிலங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 18 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டத்தின்; நவகிரி நீர்ப்பாசனத்துக்குட்பட்ட நீலண்டமடு, சுணையங்குடா வயல் கண்டம் சிறுபோகச் செய்கைக்காக தற்போது பண்படுத்தப்பட்டுவருகின்றது. இந்த நிலையில்,  இந்த வயல் கண்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பு நெல் விதைப்பதற்கு தயாராக இருந்தபோது,  அருகிலுள்ள வாய்க்காலினூடாக கற்சேனை வயல் கண்டத்துக்கு சென்றுகொண்டிருந்த நீர் வாய்க்கால் உடைப்பெடுத்து பண்படுத்தப்பட்டிருந்த வயல் நிலத்தை பாதிக்கச் செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.  

இதனால், களுமுந்தன்வெளி கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதிகளில் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

தமது வயல் நிலத்தினூடாக வாய்க்கால் நீர் உடைப்பெடுத்து பரவிச் சென்றுள்ளதால் வயலிலுள்ள அனைத்து வரம்புகளும் உடைபட்டுள்ளதுடன், பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது.  இதனால் 25 ஏக்கர் வயர் நிலம் முற்றாகப் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (14) இரவு நவகிரிகுளத்திலிருந்து 9 இஞ்சி உயரத்தில் 2 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன, பின்னர் ஞாயிற்றுக்கிழமை (15) பகல், சனிக்கிழமை திறந்துவிடப்பட்ட அந்த வான்கதவுகள் இரண்டும் 1 அடிவரை உயர்த்தப்பட்டுள்ளன.

வழக்கம்போல் இப்பிரதேசத்திலுள்ள 34 தொடக்கம் 54 வரையிலான வாய்க்கால்கள் ஊடாக நவகிரிகுளத்திலிருந்து திறந்துவிடப்படும் நீர் வயல்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றது. அதுபோல், களுமுந்தன்வெளி வாய்க்காலுடாக சென்றுகொண்டிருந்த நீர் அவ்வாய்க்காலிலுள்ள ஒரு சிறிய பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதனால் நீர் செல்ல வழியின்றி உடைப்பெடுத்துள்ளதாக நவகிரிப்பிரிவு நீர்ப்பாசன காரியாலயத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் திங்கட்கிழமை (16) திகதி இடம்பெற்றுள்ளது.

வாய்க்காலையும் குறித்த வீதியையும் புதன்கிழமை (18) நவகிரிப்பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம் புனரமைத்து வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில்  அப்பகுதி விவசாயிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் கவனத்துக்கு  கொண்டுவந்தனர். இதனை அடுத்து மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் புதன்கிழமை (18) அப்பகுதிக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்தார்.

நீர் உடைப்பெடுத்ததினால் இப்பகுதி விவசாயிகள் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயச் செய்கையிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து தான் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் இந்த இடத்துக்கு தமது அதிகாரிகளை உடன் அனுப்பி நிலைமையை ஆராய்வதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர், பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X