Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 19 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தமிழ்க் கிராமங்கள் பின்னடைந்துள்ளமைக்கு யுத்தம் ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், யுத்தம் முடிவடைந்து இப்பொழுது ஐந்து வருடங்கள் உருண்டோடியுள்ளன. இருந்தபோதிலும், ஏன் இன்னமும் தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதில் ஆச்சரியமாக உள்ளது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படும் அபிவிருத்திக் குறைபாடுகளை ஆராயும் கூட்டம், ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இத்தகைய பின்னடைவிலிருந்து தமிழ்க் கிராமங்களை மீட்டெடுப்பதற்கு நாம் அனைவரும் தமிழர், முஸ்லிம் என்ற பேதமில்லாது இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்னமும் நாம் யுத்தத்தை காரணம் காட்டிக்கொண்டோ அல்லது வேறு காரணங்களை கூறிக்கொண்டோ இருக்காமல், உடனடியாக செயலில் இறங்கவேண்டும்.
என்னுடைய முதலமைச்சர் பதவிக்காலத்தில் பின்னடைவாகவுள்ள தமிழ்க் கிராமங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பேன் என்பதை கடமைப் பொறுப்போடு கூற விரும்புகின்றேன். இனிமேல் தமிழ், முஸ்லிம் என்று பிரதேசங்களை பிரித்துப் பார்க்காது அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.
ஏறாவூர் நகரம் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்கான வடிகாலமைப்பு முறைக்கான விஞ்ஞான தொழில்நுட்ப முறையிலமைந்த திட்டம், பாழடைந்துள்ள ஏறாவூர் சந்தையை நவீன வசதிகளுடன் அமைத்தல், ஏறாவூர் நகரத்தில் தனியார் கட்டடத்தில் இயங்கும் பொலிஸ் நிலையத்தை நிரந்தரக் கட்டடத்துக்கு மாற்றுதல், ஏறாவூர் மற்றும் செங்கலடி நகரங்களிலுள்ள பொதுச்சந்தை, ஆறுமுகத்தான் குடியிருப்பு, செங்கலடி நூலகங்களை நவீனமயமாக்குதல், ஏறாவூர் போக்குவரத்துச்சாலை அபிவிருத்தி உள்ளிட்ட 16 அபிவிருத்தித்திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இதனால், இங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் நன்மை அடைவதுடன், சமூக மீளிணக்கப்பாட்டுக்கும் பெருந்துணை புரியும்.
அதிகாரிகள் தங்களது கடமைகளை தூயமனதுடன் நிறைவேற்றுவார்களாயின் இன, மத, பிரதேச வேறுபாடுகளும் மனக்கசப்புக்களும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. ஏழைகள், பாதிக்கப்பட்டவர்கள், சமூகத்தில் பின்தள்ளப்பட்ட தரப்பினர் யாராக இருந்தாலும், அவர்களது இன, மத பின்னணியை ஆராயாது பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கின்ற உயர்ந்த நாகரிகத்தை நாம் உருவாக்கி காட்டவேண்டும்' என்றார்.
இந்த நிகழ்வில்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா, அக்கரைப்பற்று மாநகரசபை எதிர்கட்சித் தலைவர் எம்.ஹனீபா மதனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .