Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 19 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க பெண்கள் தயாராகவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் தெரிவித்தார்.
சாதனைப் பெண்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தலைமையில் ஏறாவூர் பிரதேச செயலக கலாசார நிலையத்தில் வியாழக்கிழமை (19) மாலை நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ்,
'பெண்கள் தொடர்ந்து தம்மை இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்ற பட்டியலுக்குள் வைத்து தங்களைத் தாங்களே பலவீனப்படுத்திக் கொள்ளக்கூடாது. மாறாக கல்வி, நிர்வாகம், அரசியல், விஞ்ஞானம் ஊடகம் ஆகிய துறைகளில் கால்பதிக்க வேண்டும். குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் வியாபித்துள்ள இந்தக் காலகட்டத்தில், பெண்கள் தங்களது கருத்துக்களை வலியுறுத்தும் நோக்கில் ஊடகத்துறையில்; முன்னேறவேண்டும்.
நவீன தொழில்நுட்பத்தினூடாக அபிவிருத்தி என்கின்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எனவே, இந்தப் போக்குகளுடன் நாமும் முன்னேறவேண்டும். பெண்கள் இன்னமும் பல சவால்களுக்கு முகங்கொடுக்கின்ற அதேவேளை, பின்தள்ளப்பட்டும் இருக்கின்றார்கள். பாதுகாப்பற்ற நிலைமை நீடிக்கின்றது. தங்களை மீட்டெடுக்க யாரோ குரல் nhகடுப்பார்கள் என்று காத்திருக்கின்ற நிலைமையிலேயே பெண்கள் வாழவேண்டியிருக்கின்றது.
பெண்கள் தங்களை பாதிப்புக்களிலிருந்து மீண்டெழுந்து வலுவாக தங்கiளை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
மாவட்டத்தில் நடக்கின்ற தீர்மானம் எடுக்கப்படுகின்ற நிகழ்வுகளிலே அரசியல்வாதிகளாகவும் ஊடகவியலாளர்களாகவும் பெண்கள் பிரசன்னமாகியிருப்பதை ஒருபோதும் காணமுடிவதில்லை.
பின்னடைவுகளிலிருந்தும் பின்னடைவான சிந்தனைப் போக்குகளிலிருந்தும் பெண்கள் முழுமையாக வெளியில் வரவேண்டும். தீர்மானம் எடுக்கின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் பெண்கள் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
பெண் விடுதலை உரிமை என்பதெல்லாம் குடும்பங்களுக்கிடையில் கிளர்ச்சியையும் முரண்பாடுகளை உருவாக்குவதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.
கணவனை, பிள்ளைகளை, பெற்றோரை கைவிட்டு விடுவதற்கு பெண்ணுரிமைக் கோஷம் பயன்படுத்தப்படக் கூடாது. குடும்பத்திற்குள்ளேயே இருந்துகொண்டு தன்னையும் பிறரையும் சிறப்பாக வழிநடத்தி சமூக மேம்பாட்டையும் அபிவிருத்தியையும் கொண்டு வருவதே பெண்ணுரிமையின் அர்த்தமாகும்.
இது ஒரு பெண்ணுக்கு கடமையும் கூட. பெண்கள் இந்த நாட்டிலே வாழ்வதற்கு எந்த சங்கடங்களும் இல்லை. உரிமைகள் தரப்பட்டிருக்கின்றன. பெண்கள் தெரியாத தேசத்துக்கு தொழில் தேடிச் சென்று சடலமாக நாட்டுக்குத் திரும்பும் அவலநிலையைப் பற்றிப் பெண்களும் ஆண்களும் சிந்திக்க வேண்டும். தாய்மார் குழந்தைகளைக் கைவிட்டு மத்திய கிழக்கு சென்றதால் அநேக குழந்தைகள் நிராதரவாகி இருக்கின்றார்கள்.
போதைவஸ்து, மூடக்கொள்கைகள், சிறுவயதுத் திருமணம், இளவயதுக் கர்ப்பம், பாடசாலை இடைவிலகல், போன்ற சமூகச் சீர்கேடுகளுக்கு ஆளாகியிருக்கின்றவர்களை மீட்டெடுக்க பெண்கள் போராட வேண்டும். இந்த மாவட்டத்தின் அனைத்து வீழ்ச்சிக்கும் விடிவு காண வேண்டிய பாரிய பொறுப்பு பெண்களுக்கு இருக்கின்றது. ஆக்கபூர்வமான விடயங்களுக்காக பெண்கள் இணைந்து போராட வேண்டும்' என்றார்.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.கிரிதரன், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான எஸ்.அருணாளினி, ஜே.ரி.மபாஹிறா உட்பட சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .