2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யானை தாக்குதலுக்கு முடிவு கோரி ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 20 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்தக்கோரி பிரதேச மக்கள் இன்று காலை வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் பிரதான வாயில் கதவை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல காலமாக யானையின் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அவற்றினை கட்டுப்படுத்த இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட எல்லைக் கிராமங்கள் மற்றும் யானைகளினால் பாதிக்கப்படும் கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு வருகைதந்த பிரதேச செயலாளரை அலுவலகத்துக்கு செல்ல அனுமதிக்காத பொதுமக்கள், தமது பிரச்சினைக்கு தீர்வினை வழங்கிவிட்டுச் செல்லுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் யானை பாதுகாப்புக்கு என வனஜீவராசிகள் திணைக்களத்தின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் அவற்றினால் இதுவரையில் தமது யானை பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

தமது பிரச்சினைக்கு முறையான தீர்வு கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா, ஞா.கிருஸ்பிள்ளை ஆகியோர் வருகைதந்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதன்போது சம்பவ இடத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் வருகைதந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலையேற்பட்டது.

இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், பிரதேச செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிலையில் யானைகளை மக்கள் பகுதிகளில் இருந்து அகற்றுவதற்காக உறுதிமொழியை எழுத்துமூலம் தரவேண்டும் என பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது.

போரதீவுப்பற்றில் அனேகமான பகுதிகளில் மக்கள் பீதியுடனேயே வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையே காணப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.

யுத்த காலத்துக்கு பின்னர் இந்த யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இது தொடர்பில் பல தடவைகள் தாங்கள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்ற போதிலும் எதுவித நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, 'யானைகளின் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கூட்டங்களை நடாத்திப ல்வேறு தீர்வுகள் எடுக்கப்பட்ட நிலையிலும் எதுவித பிரயோசனமும் இல்லை' என தெரிவித்தார்.

ஆமைச்சு மட்டத்திலும் மாவட்ட செயலக மட்டத்திலும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. ஆனால் அதுதொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இனியும் இதனை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் யானைகளின் தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை யெடுப்பதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் வழங்கிய எழுத்து மூலமான உறுதியையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது ஆர்ப்பாட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

நேற்று வியாழக்கிழமை காலை போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வக்கியல்ல பகுதியில் யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறியதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள படுவான்கரைப் பகுதியில் தொடரச்சியாக காட்டு யானைகளின் தாகுதல்கள் நடைபெற்றவண்ணமே உள்ளன. இவற்றுக்குத் தீர்வு காணும் முகமாப அமைச்சர்களும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் இங்கு வந்து சென்றுள்ள போதிலும் தொடர்ந்து காட்டு யானைகளின் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

எதிர்வரும் 2 வார காலத்துக்குள் இப்பிரதேசத்திலுள்ள காட்டு யானைகள் அனைத்தும் விரட்டியடிக்கப்படல் வேண்டும். அல்லாது விட்டால் இப்பகுதியிலுள்ள மக்கள் வாழ முடியாமல் இடம்பெயரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே, இங்குள்ள காட்டு யானைகளைப் பிடித்து வாகனங்களிலே எற்றிக்கொண்டு சரணாலயங்களிலே விடுவதுதான் சிறந்த வழிமுறையாகும்.

அபிவிருத்தித் திட்டங்களுக்காக காடு;கள் அழிக்கப் பட்டுள்ளன அந்த காடுகளிலிருந்த யானைகள் தான் தற்போது மக்கள் குடியிருப்புகளினுள் வருகின்றன' என அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,  

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக அதாவது சமாதான காலத்தில்தான் காட்டு யானைகளின் தாகுதல் அதிகரித்துள்ளது. காட்டு யானைகளின் தாகுதல்களினால் இதுவரையில் 16பேர் உயிரிழந்துள்ளார்கள். 400இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றை விட மதிப்பிட முடியாத பல சொத்துக்கள் யானைகளால் அழிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் யானைகளைப் பாதுகாக்கின்றது. மாறாக மனிதர்களைப் பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மஹிந்த அரசாங்கம் செய்த நடைமுறையைத் தான் தற்போதைய மைத்திரி அரசாங்கமும் செய்து கொண்டிருக்கின்றது.

காடுகளை அழித்து அத்து மீறிய குடியேற்றத்தினை மேற்கொள்வதனாலும் மேச்சல் தரைகள் அழிக்கப்படுவதனாலும் தான் கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைகின்றன' என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X