2025 மே 19, திங்கட்கிழமை

'காணிப் பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வு காணமுடியாது'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 22 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகங்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள்  இலகுவில் தீர்க்கப்படகூடியவை  அல்ல என்று  கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ்  நஸீர் அஹமட் சகிதம் ஞாயிற்றுக்கிழமை (22) விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர்,    அங்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

'ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி எதிர்நோக்கும் காணிப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்காக அது குறித்த முழுமையான அறிக்கையை அரசாங்க அதிபரிடம் கோரியுள்ளேன். இதற்கு  முன்னுரிமை அளித்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்

ஏறாவூர் சந்தைப் பிரச்சினை தொடர்பில் முழு விவரங்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிப்பதாக முதலமைச்சர் என்னிடம் உறுதியளித்துள்ளார். இதன் அடிப்படையில்  அதன் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முக்கியமான விவகாரமான காணிப் பிரச்சினை  சிக்கல் நிறைந்தது. இதற்கு உடனடியாக தீர்வு காணமுடியாது.
மட்டக்களப்பு வாசிகளான பெரும்பான்மையின  மக்கள் தங்களது காணிகளை மற்றையவர்கள் அடாத்தாக கைப்பற்றியுள்ளதாக கூறுகின்றார்கள். சமாதான சூழ்நிலை ஏற்பட்ட பின்னரும் அதனை கைப்பற்றியவர்கள் திருப்பித்தர மறுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறான கருத்தை முஸ்லிம் சமூகத்தினரும் கூறுகின்றார்கள்.
இந்த விவகாரம் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆயினும்,  உடனடியாக தீர்வு காணக்கூடிய சாதாரண விடயமல்ல இது. சட்டப் பிரச்சினைகள்; இருக்கின்றன. சட்ட ஏற்பாடுகளில் சில மாற்றங்களை கொண்டுவந்ததன் பின்னர்,  காணிப் பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியிருப்பதாக முதலமைச்சர் எனக்கு தற்போது தெரியப்படுத்தியுள்ளார். எது எவ்வாறிருப்பினும்,  காணிப் பிரச்சினைகளின் பின்னணியில் பல ஆர்வமுள்ள தரப்பினர் குறிப்பாக அரசியல்வாதிகள், மக்கள், நிர்வாக அதிகாரிகள், அமைச்சுக்கள் என்று பல பின்னணிகள் இருக்கின்றன' என்றார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் என்.எம்.முபீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X